பாதிக்கப்பட்டவரைப் பார்க்க பாஸ் அனுமதிக்கப்படவில்லை

பாஸ் குழு ஒன்று புக்கிட் கெப்போங் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜமிலா அபு பாக்காரைச் சந்திப்பதை 10 பேர் தடுத்து விட்டனர்.

அந்தத் தகவலை ஜோகூர் பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் காயாட் இன்று வெளியிட்டார்.

ஜோகூர் ஸ்கூடாய் கானானில் வசிக்கும் ஜமிலாவைச் சந்திக்க  பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபுவுடன் தாமும் ஆறு கட்சி உறுப்பினர்களும் மூன்று வாகனங்களில் சென்றதாக அவர் சொன்னார்.

அம்னோ உறுப்பினர்களையும் கொண்ட பத்துப் பேர் அடங்கிய கும்பல் ஒன்று இடைவழியில் மறித்துக் கொண்டு பாஸ் உறுப்பினர்கள் மேலும் செல்ல விடாமல் தடுத்து விட்டது என்றார் அவர்.

“அவர்கள் எங்களைத் தடுத்தனர். மாட் சாபு, மாட் இந்ராவை தற்காக்க முயலுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மாட் சாபு தமது அறிக்கையை மீட்டுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து செல்ல அனுமதிக்க முடியாது என அவர்கள் கூறினர்.”

“அவர்கள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை,” என அவர் சுஹாய்சான் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

1950ம் ஆண்டு புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர் முகமட் இந்ரா என்றும் அவர் சுதந்திரத்துக்குப் போராடிய “வீரர்” என்றும் மாட் சாபு ஆகஸ்ட் 21ம் தேதி நிகழ்த்திய உரை ஒன்றில் கூறியிருந்தார்.

அதற்கு சில தரப்புக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. அந்தத் தாக்குதலின் மாட் இந்ரா வழி நடத்திய கம்யூனிஸ்ட்களுக்கு மாட் சாபு புகழாரம் சூட்டுவதாக அம்னோ தலைவர்களும் அந்தக் கட்சிக்கு சொந்தமான உத்துசான் மலேசியாவும் குற்றம் சாட்டி வருகின்றன.

“நாங்கள் நல்ல எண்ணத்துடன் அங்கு சென்றோம். ஆனால் அவர்கள் எங்களைத் தடுத்து விட்டனர். நாங்கள் மோதல் நிகழும் என அஞ்சினோம். அதனால் வெளியேறி விட்டோம்,” என்றார் சுஹாய்சான்.

“புக்கிட் கெப்போங் சம்பவத்தின் போது ஜமிலா காயமடைந்ததாகவும் அவரை மாட் இந்ரா காப்பாற்றியதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனால் பாஸ் கட்சி ஜமிலாவைச் சந்திக்க விரும்பியது.”

“நாங்கள் அந்த உண்மையை தெளிவுபடுத்த விரும்பினோம். அவரது தாயாரும் உடன்பிறப்புக்களும் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதால் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அவர்கள் கோரிக்கை ஏதும் விடுக்க விரும்பினால் சட்ட உதவி வழங்கவும் நாங்கள் தயாராக இருந்தோம்”, என்றும் சுஹாய்சான்.
குறிப்பிட்டார்.

ஜமிலா சந்திக்க ஒப்புக் கொள்ளவில்லை

1950 சம்பவத்தின் போது ஜமிலாவின் தந்தை மரின் கான்ஸ்டபிளாக பணியாற்றினார். அந்தச் சம்பவத்தில் அவர் கிளர்ச்சிக்காரர்களினால் பல முறை சுடப்பட்டார். ஆனால் அவர் உயிர் தப்பினார். 1979ம் ஆண்டு அவர் புற்று நோய் காரணமாக மரணமடைந்தார்.

ஜமிலா, மாட் சாபுவைச் சந்திக்க விரும்பாததால் பாஸ் குழு தடுக்கப்பட்டதாக பெரித்தா ஹரியான் என்ற மலாய் நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“வர வேண்டிய அவசியமில்லை. பழைய புண்களை மீண்டும் திறப்பதற்கு அது வழி வகுக்கும். நாட்டையும் மக்களையும் தற்காப்பதற்காக என் தந்தையும் அவரது தோழர்களும் சண்டையிட்டதையும்  செய்த தியாகத்தையும் மறுக்கும் ஒருவரை நான் எப்படி வரவேற்க முடியும்? மாட் சாபு கம்யூனிஸ்ட்களைப் பெருமைப்படுத்துகிறார்”, என ஜமிலா சொன்னதாக பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

மாட் சாபு அறிக்கையைத் தொடர்ந்து மாட் இந்ரா, சுதந்திரப் போராட்ட வீரரா அல்லது கம்யூனிஸ்ட் பயங்கரவாதியா என்னும் சர்ச்சை மூண்டுள்ளது.

இதனிடையே 2004ம் ஆண்டு ஜோகூர் அரசாங்கம் வெளியிட்ட ஒரு புத்தகம், மாட் இந்ராவை சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் கொண்டாடப்படுகிற ஜோகூர் வீரர்களில் அவரும் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ளதாக பாஸ் கட்சி அறிவித்துள்ளது.

மலாயா கம்யூனிஸ்ட் கட்சி பாலிங் ஒப்பந்தத்தின் போது சுதந்திரப் போராட்டத்திற்கு பங்காற்றியதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அதற்குப் பின்னர் அது ஆயுதங்களை கை விட்டது.

என்றாலும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகளுக்கும் எதிராக கம்யூனிஸ்ட்கள் நடத்திய போராட்டம் பயங்கரவாதமும் மரணங்களும் பேரழிவும் நிகழ்ந்த காலம் என மற்றவர்கள் கருதுகின்றனர்.

TAGS: