என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனைப் பயன்படுத்தி வாங்கியதாகக் கூறப்படும் மூன்று சொத்துக்களை விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பிகேஆர் இன்று கூறிக் கொண்டுள்ளது.
அந்த சொத்துக்களை Insun Development Sdn Bhd என அழைக்கப்படும் நிறுவனம் ஒன்றுக்கு 3 மில்லியன் ரிங்கிட்டுக்கு என்எப்சி நிர்வாகத் தலைவர் முகமட் சாலே இஸ்மாயிலும் நிர்வாக இயக்குநர் வான் ஷாஹினுர் இஸ்ரான் சாலே-யும் விற்று விட்டதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறினார்.
“தாம் ‘பதவி துறக்கப் போவதாக’ மகளிர், சமூக, மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் ஜலில் அறிவித்த பின்னர் அந்தச் சொத்துக்கள் விற்கப்பட்டன,” என்று அவர் சொன்னார்.
(ஏப்ரல் 8ம் தேதி தமது செனட்டர் பதவிக் காலம் நிறைவுக்கு வரும் போது அமைச்சரவையிலிருந்து ‘விலகுவதாக; மார்ச் 11ம் தேதி ஷாரிஸாட் அறிவித்தார். என்எப்சி ஊழல் தொடர்பில் அதற்கு அடுத்த நாளன்று அவரது கணவருமான முகமட் சாலே மீது நீதிமன்றத்தில் இரண்டு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.)
“அந்தச் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது- அந்த நிறுவனம் “கலைக்கப்படுவதை” உணர்த்துகிறது. தனது சொத்துக்களை அது ரொக்கமாக்கி வருகிறது.”
முகமட் சாலே-யுடன் இஸ்ரான், வான் ஸாஹினுர் இஸ்மிர், வான் இஸ்ஸானா பாத்திமா ஸாபேடா என்ற அவரது மூன்று பிள்ளைகளும் என்எப்சி-யை நடத்தி வருகின்றனர்.
முகமட் சாலே, இஸ்ரான் பெயர்களில் வாங்கப்பட்ட அந்த மூன்று சொத்துக்களும் ஸ்ரீ ஹர்த்தா மாஸில் உள்ள பிளாஸா டாமாஸில் உள்ள மூன்று கடை/அலுவலக மனைகளாகும்.
“நடப்புச் சந்தை விலைப்படி, அந்த மூன்று சொத்துக்களின் விலை 4 மில்லியன் ரிங்கிட் ஆகும். 25 விழுக்காடு கழிவுடன் அந்தச் சொத்துக்கள் விற்கப்படுகின்றன என்பதே அதன் பொருளாகும்.”
‘குறைந்த விலையில் விற்பனை’
நாங்கள் ஏற்கனவே சொத்துக்கள் வாங்கப்பட்டது பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தினோம். இப்போது குறைந்த விலையில் அந்தச் சொத்துக்கள் விற்கப்படுகின்றன,” என்றார் அவர்.
KL Eco City மேம்பாட்டுத் திட்டத்தில் 34 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை கொள்முதல் செய்வதற்கு என்எப்சி இயக்குநர்களுக்குக் கடனுதவி செய்த அதே வங்கி வாங்கிய கடன்களைக் கொண்டு அந்த மூன்று சொத்துக்களும் வாங்கப்பட்டன என்றார் ராபிஸி.
தேசிய விலங்கு கூட மய்யத்துக்கு அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனில் ஒரு பகுதியை இயக்குநர்கள் அந்த வங்கியில் போட்டு வைத்திருந்தனர்.
சொத்து முடக்கம் என்எப்சி நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் எனக் குறிப்பிட்ட அவர், அந்த முடக்கம் “தனிப்பட்ட உத்தரவாதமாக” இருக்கும் பொருட்டு 2007ம் ஆண்டுக்குப் பின்னர் வாங்கப்பட்ட தனிப்பட்ட சொத்துக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
“அந்த 250 மில்லியன் ரிங்கிட் கடனை எப்படி மீட்பது என்பது பற்றி இப்போது கவனம் செலுத்தப்பட வேண்டும். அந்தச் சொத்துக்களை வாங்க அவை பயன்படுத்தப்பட்டுள்ளன,” என அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.
சிங்கப்பூர், கஸக்ஸ்தான் ஆகியவை உட்பட என்எப்சி உரிமையாளர்களுக்கு அல்லது நிறுவனத்துக்கு சொந்தமாக இருப்பதாகக் கூறப்படும் மற்ற வர்த்தகங்களையும் உள்ளடக்கும் வகையில் சொத்து முடக்கத்தை அரசாங்கம் விரிவுபடுத்த வேண்டும் என்றும் ராபிஸி வலியுறுத்தினார்.
என்எப்சி கூட்டு நிறுவனங்களும் அவற்றின் உரிமையாளர்களும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் 73 ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை கொள்முதல் செய்துள்ளதை ஏற்கனவே பிகேஆர் அம்பலப்படுத்தியுள்ளது.