24 இராணுவ அதிகாரிகளின் மனைவிகள்/ கணவர்கள் இராணுவத்தில் பணியாற்றும் தங்களது கணவர் அல்லது மனைவியின் அடையாளக் கார்டு எண்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக டிஏபி ராசா நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக் தகவல் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ராசா மலேசிய ஆயுதப் படை முகாமில் உள்ள அஞ்சல் வாக்காளர்கள் பட்டியலில் 19 ஆண் இராணுவ வீரர்களுடைய மனைவிகள் தங்களது கணவர்களுடைய அடையாளக் கார்டு எண்களின் கீழ் அஞ்சல் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
“அவர்கள் தங்கள் கணவருடைய சாதாரண அடையாளக் கார்டு எண்ணை ஆனால் மனைவியர் பெயரின் கீழ் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தியுள்ளனர்- மனைவிக்கு சாதாரண வாக்காளர் என்னும் முறையில் வாக்களிக்கும் உரிமை உள்ளது- அதனால் அவர் இரண்டு முறை வாக்களிக்க முடியும்,” என அந்தக் குளறுபடிகளை நிருபர்கள் சந்திப்பில் வெளியிட்ட போது லோக் கூறினார்.
“அந்த அடையாளக் கார்டு எண்கள் நிச்சயமாக ஆண்களுடையவை. ஏனெனில் அவை ஒற்றைப் படை எண்கள். பெண்களுடைய அடையாளக் கார்டு எண்கள் இரட்டைப் படை எண்கள். ராசா இராணுவ முகாமில் அவர் ஒரு வாக்காளர் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது.”
எடுத்துக்காட்டுக்கு நூர் அட்டிக்கா ஸாக்காரியா என்பவர் ஆண் மை கார்டான 840306-02-5561 -ஐ வைத்துள்ளார். இராணுவ அதிகாரி என நம்பப்படும் அவரது கணவரான முகமட் ஹாஸ்புல்லா அப்துல் வஹாப்புக்கு இராணுவ மை கார்டு T1140868 உள்ளது. இருவருக்கும் ஒரே பிறந்த தேதி, ஒரே இடம். வாக்களிப்பு மாவட்டமும் ஒன்றாகும்.
“அவை அனைத்தும் புதிய பதிவுகள் ஆகும். அது இயல்பான தவறாக இருக்க முடியாது. அந்தப் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் ஒரு தொகுதியில் 19 குளறுபடிகள் நிகழ்ந்திருப்பது தற்செயலாக நிகழ்ந்த சம்பவமாக இருக்க முடியாது,” என்றார் லோக்.
இதர இரண்டு சம்பவங்களில் இரண்டு பெண் இராணுவ அதிகாரிகளின் கணவர்கள் தங்கள் துணைவியரின் சாதாரண அடையாளக் கார்டின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
“என்எம் எஸ்வானி மாட் ஈசாவின் அடையாளக் கார்டு எண் 830902-05-5290, அந்த எண்ணுடைய கடைசி நான்கு இலக்கங்கள் இரட்டைப் படை எண்கள். அது பெண்களுக்கு உரியதாகும். அதே வேளையில் அவரது துணைவியான நோர்லியானிஸா அபு இராணுவ வீரர்களுடன் ஒரு வாக்காளராக இராணுவ அடையாளக் கார்டு எண் T5005217 மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளார்.”
இவ்வாண்டு இரண்டாவது கால் பகுதியில் 2,600க்கும் மேற்பட்ட அஞ்சல் வாக்காளர்கள் தமது தொகுதியில் இருந்ததாகவும் லோக் தெரிவித்தார்.
“கண்டு பிடிக்கப்பட்ட அந்த 19 குளறுபடிகள் பெரும் எண்ணிக்கையிலான குளறுபடிகளின் நுனியாகவும் இருக்கலாம்,” எனக் குறிப்பிட்ட அவர், வாக்காளர் பட்டியல் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்றார்.
ஆயுதப் படை வீரர்களின் மனைவி/கணவர்கள் அஞ்சல் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படுவதற்கு வகை செய்யும் பொருட்டு கடந்த ஆண்டு திருத்தப்பட்ட தேர்தல் விதிமுறைகள் பல குளறுபடிகளுக்கு வித்திட்டு விட்டதாக லோக் கருதுகிறார். சில சமயங்களில் அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
“இது என் தொகுதியில் மட்டும் நிகழ்வில்லை. ராசாவில் எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதினுடைய தொகுதியான ரெம்பாவிலும் அது நிகழ்ந்திருக்கக் கூடும். நாங்கள் அதனை அடுத்து அலசுவோம்,” என்றார் அவர்.
அஞ்சல் வாக்கு நடைமுறைகளின் நம்பகத்தன்மை இன்னும் குழப்பமாகவே உள்ளது. வாக்களிக்கப்படும் போது அதனைப் பார்வையிடுவதற்கு அரசியல் கட்சிகளின் முகவர்கள் இராணுவ முகாம்களுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை என்றும் லோக் குறிப்பிட்டார்.
“பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு அஞ்சல் வாக்காளருக்கும் ஒர் அஞ்சல் வாக்கு கொடுக்கப்பட்டுகிறது. வாக்குகள் வெளியிடப்படும் போது மட்டுமே தேர்தல் ஆணைய அதிகாரியுடன் தேர்தல் முகவர்கள் இருக்கின்றனர். அதற்கு பின்னர் யார் அதனைப் பயன்படுத்துகின்றனர். யார் வாக்களிக்கின்றனர் என்பதை யாரும் கண்காணிக்க முடியாது.”