ஹிம்புனான், மஞ்சள் கடலில் “பசுமை சுனாமியை” நடத்த வாக்குறுதி

ஏப்ரல் 28ம் தேதி ஹிம்புனான் ஹிஜாவ் 3.0 (Himpunan Hijau 3.0) சாலைகளில் ஊர்வலமாகச் சென்று  பெர்சே 3.0 பேரணியுடன் இணைந்து கொள்ளும்.

KLCC என்ற கோலாலம்பூர் மாநகர மய்யத்தில் அன்றைய தினம் நண்பகல் வாக்கில் ஒன்று கூடும் ஐந்து பசுமைக் குழுவினர் அங்கிருந்து  மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெர்தேக்கா சதுக்கத்திற்கு ஊர்வலமாகச் செல்வர். அந்தச் சதுக்கத்தில் பெர்சே 3.0 பேரணியை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த விவரங்களை ஹிம்புனான் தலைவர் வோங் தாக் இன்று அறிவித்தார்.

அந்தப் பேரணியில் பங்கு கொள்ளும் தனது ஆதரவாளர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள பெர்சே 3.0, தூய்மையான, நியாயமான தேர்தல்களைக் கோரி  அந்த மெர்தேக்கா சதுக்கத்தில் பிற்பகல் 2 மணிக்கு குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

லினாஸ் அரிய மண் தொழில் கூஉடம் விரைவில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் குவாந்தான் மக்கள் “வாழ்வா சாவா என்ற கடுமையான கட்டத்தில்” இருப்பதாக வோங் சொன்னார்.

“நாங்கள் போதுமான அளவுக்கு கூச்சல் போட்டு விட்டோம். கூக்குரலும் எழுப்பி விட்டோம். எங்கள் தரப்பில் இந்த முடிவு இறுதியானது. லினாஸ் மலேசியாவிலிருந்து வெளியேற வேண்டும்,” என்றார் அவர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதிக்கு பின்னர் நடத்தப்படும் அந்த மூன்றாவது பேரணியில் “பத்தாயிரக்கணக்கான மக்கள்” கலந்து கொண்டு கோலாலம்பூரை மஞ்சள் நிற, பச்சை நிறக் கடலாக மாற்றி விடுவர் என வோங் நம்புகிறார்.

ஹிம்புனான் ஹிஜாவ்-வின் அடையாள நிறம் பச்சையாகும். பெர்சே-யின் அடையாள நிறம் மஞ்சள் ஆகும். 

பெர்சேயுடன் இணைந்து கொள்ளும் முடிவை விளக்கிய வோங், ‘தூய்மை’ என்னும் பொதுவான நோக்கத்தை இரண்டு அமைப்புக்களும் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்தார்.

“பசுமையான சுற்றுச்சூழல் வேண்டுமானால் நமக்கு தூய்மையான அரசாங்கம் தேவை. ஆனால் இப்போது நாம் பெற்றுள்ள அரசாங்கம் முறையாக இயங்கவில்லை. அதில் ஊழல் மலிந்துள்ளது.”

“ஆகவே அரசாங்கம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கட்டளையை நிறைவேற்ற முடியாது என்றால் அதனை அகற்றுவதற்கு நாம் முழு மூச்சாக செயல்பட வேண்டும்,” என்றார் வோங்.

அனுமதி கேட்கப் போவதில்லை

அந்த ஊர்வலத்துக்குப் போலீஸ் தடையாக இருக்கக் கூடிய சாத்தியம் இருப்பது பற்றி வினவப்பட்ட போது அமலாக்க அதிகாரிகள் தங்கள் கடமைகளை தொழில் ரீதியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.

“அந்த ஊர்வலத்தை அனுமதிப்பதா அல்லது அனுமதிப்பது இல்லையா என்பது கேள்வி அல்ல. மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க விரும்புகின்றனர். அதற்கு நமது அரசமைப்பில், பூமி சாசனக் கோட்பாட்டில், ஐநா கோட்பாட்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.”

“அவை அமைதியாக நடத்தப்படுவதை உறுதி செய்வதே அவர்களுடைய கடமையாகும். நாங்கள் அனுமதி கேட்கவில்லை,” என்றும் வோங் கூறினார்.

தெலுக் ருபியாவைக் காப்பாற்றுங்கள் குழு, ரவூப் சைனாய்ட் எதிர்ப்புக் குழு, ரவாங்கைக் காப்பாற்றுங்கள் குழு, ஜாலான் சுல்தானைக் காப்பாற்றுங்கள் குழு ஆகியவை உட்பட பல சிவில் சமூக அமைப்புக்கள் வோங் நிருபர்களைச் சந்தித்த போது உடனிருந்தன.

இதனிடையே அந்த அரிய மண் தொழில் கூடத்தை ரத்துச் செய்தால் உள்நாட்டு விநியோகிப்பாளர்கள் பாதிக்கப்படுவர் எனக் கூறப்படுவதை ஜாலான் சுல்தானைக் காப்பாற்றுங்கள் குழு கூட்டுத் தலைவர் ஸ்டான்லி யோங் நிராகரித்தார். அது வெறும் பிதற்றல் என்றார் அவர்.

“அந்த விநியோகிப்பாளர்கள் குவாந்தான் மக்கள் தொகியில் சிறிய பிரிவினரே. லினாஸ் இயங்கத் தொடங்கினால் நாம் எதிர்நோக்கக் கூடிய பயங்கரங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறினால் அவர்களும் அந்த திட்டத்திலிருந்து ஒடி விடுவர்.”

“நம்மை அமைதியாக இருக்கும்படி செய்வதற்கு லினாஸும் மாநில அரசாங்கமும் தயாரித்துள்ள சிறிய வியூகம் அதுவாகும். ஆனால் நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை,” என யோங் குறிப்பிட்டார்.

லினாஸ் தொழில் கூடத்துக்கு உள்ளூர் மக்கள்  எதிர்ப்புத் தெரிவிப்பதை அறிந்த பின்னர்  அதற்கு ரசாயனப் பொருட்களை வழங்குவதிலிருந்து விலகிக் கொள்ள டென்மார்க் நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறிக் கொண்டார்.