பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு மறியல் செய்வது மந்திரி புசார் தலையிட்டதால் கைவிடப்பட்டது

கேமிரன் மலை குடியிருப்பாளர்கள் புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த குந்தியிருப்புப் போராட்டம், அந்த விவகாரத்தில் பாகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கோப்  தலையிட்டதைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது.

நிலம், விவசாயம் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் மீது உள்ளூர் மக்களைச் சந்தித்துப் பேசுவதற்கு அட்னான் ஒப்புக் கொண்டுள்ளதாக கேமிரன் மலை பிஎஸ்எம் செயலாளர் சுரேஷ் குமார் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இது கேமிரன் மலை மக்களுக்குச் சிறிய வெற்றியாகும். ஏனெனில் பாகாங் மந்திரி புசாரைச் சந்திப்பதற்கு நாங்கள் விடுத்த வேண்டுகோள் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது,” என்றார் அவர்.

பல தசாப்தங்களாக தாங்கள் வேலை செய்து வரும் நிலத்துக்கான டோல்  (TOL) எனப்படும் தற்காலிக  குடியிருப்பு அனுமதிகளுக்கு சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது குறித்து உள்ளூர் மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேம்பாட்டுக்காக அகற்றப்படவிருக்கு கியா பண்ணையில் உள்ள கடைகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் பிரச்னைக்கும் நல்ல தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

புத்ராஜெயாவில் முகாம்களை அமைக்க மக்கள் கொண்டிருந்த நோக்கம், மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்களைச் சந்திக்க இறுதியில் பாகாங் மந்திரி புசாரை ஒப்புக் கொள்ள வைத்துள்ளது,” என சுரேஷ் அறுதியாகக் கூறினார்.

புத்ராஜெயாவுக்குச் செல்வதற்குப் பதில் அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பிஎஸ்எம் தலைமையிலான குழு விஸ்மா ஸ்ரீ பாகாங்கில் நாளை அட்னானைச் சந்திக்கும்.