பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் க்ட்சி நடவடிக்கைகளில் பங்கு கொள்வதற்கு சுதந்திரம் வழங்கும் சட்டத் திருத்தங்கள் இன்று மக்களவையில் சமர்பிக்கப்பட்டன.
1971ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவில் செய்யப்படும் திருத்தங்கள் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் மாணவர்கள் உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்வதற்கு அந்த திருத்தங்கள் வகை செய்கின்றன.
என்றாலும் அரசியல் கட்சிகளில் பதவிகளை வகிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக தேர்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்படுவதாக திருத்தங்கள் கூறுகின்றன. அதே வேளையில் அவர்கள் மாணவர் கழகங்கள், அமைப்புக்கள், குழுக்கள் ஆகியவற்றில் பதவிகளை வகிக்கவும் முடியாது.
இன்று மொத்தம் மூன்று மசோதாக்கள் முதலாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்பட்டன. 2012ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத் திருத்த மசோதா, 2012ம் ஆண்டுக்கான தனியார் உயர் கல்விக் கூட திருத்த மசோதா, 2012ம் ஆண்டுக்கான கல்விக் கூடங்கள் (கட்டொழுங்கு) மசோதா ஆகியவையே அவை.