பிகேஆர்: சொத்துக்களை அடமானமாக வைக்குமாறு ஷாரிஸாட் உறவினர்களை கட்டாயப்படுத்துங்கள்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் மீட்கப்படும் வரையில் முன்னாள் கூட்டரசு அமைச்சர் ஷாரிஸாட் குடும்பத்தினர் தங்களது சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டும் என அரசாங்கம் கட்டாயப்படுத்த வேண்டும் என பிகேஆர் விரும்புகிறது.

கடந்த ஜனவரி முதல் திருப்பிச் செலுத்தப்படாமல் இருக்கும் அந்தக் கடனை அடைக்கும் நடவடிக்கையை அந்த நிறுவனம் தொடங்கா விட்டால் அரசாங்கம் ” பொது நிதிகளை மீட்பதற்கு” அவர்களுடைய சொத்துக்களை ஏலத்துக்கு விடலாம்  என்றும் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் பரிந்துரை செய்தார்.

“அந்த 250 மில்லியன் ரிங்கிட் கடனைத் திரும்பப் பெறுவதே பிரதமரும் நிதி அமைச்சருமான  நஜிப் அப்துல் ரசாக்கின் முக்கியப் பொறுப்பாக இப்போது இருக்கவேண்டும்,” என ராபிஸி நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

“பிரதமர், நிதி அமைச்சர் என்ற முறையில் அரசாங்கத்திடம் தங்களது சொத்துக்களை ஷாரிஸாட் குடும்பத்தினர் அடமானம் வைப்பதற்கு அவர்களுடைய இணக்கத்தைப் பெற வேண்டும்,” என்றும் ராபிஸி வலியுறுத்தினார்.