நஜிப் அப்துல் ரசாக் பிரதமர் பொறுப்பை ஏற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அந்த மூன்று ஆண்டுகள் தமது சாதனைகள் பற்றிய ரிப்போர்ட் கார்டை வழங்குவதற்காக நஜிப் இப்போது நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார்.
அந்த ரிப்போர்ட் கார்டின் தலைப்பு ” நமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்” (Janji Ditepati) என்பதாகும். அது தற்போது அச்சு ஊடகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. அது இன்று முழுப் பக்க விளம்பரங்களாக எல்லா முக்கிய நாளேடுகளிலும் வெளிவந்துள்ளன.
கடந்த ஒர் ஆண்டில் நஜிப் நிர்வாகம் மக்களுக்கு விநியோகம் செய்த மொத்த ரொக்கப்பணத்தை பட்டியலிடும் முழு பக்க வண்ண விளம்பரங்கள் அனைத்து மொழி நாளேடுகளிலும் இடம் பெற்றுள்ளது.
Bantuan Rakyat 1Malaysia-வுக்கு மொத்தம் 2.6 பில்லியன் ரிங்கிட், Program Kebajikan Rakyat 1Malaysia -வுக்கு 1.4 பில்லியன் ரிங்கிட், பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்களுக்கான புத்தக பற்றுச்சீட்டுக்களுக்கு 263 மில்லியன் ரிங்கி, மாணவர் உதவித் தொகையாக 550 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.
14 கிலோ எடையுள்ள ஒவ்வொரு சமையல் எரி வாயு தோம்புக்கும் அரசாங்கம் 20 ரிங்கிட் 96 சென் உதவித் தொகை கொடுப்பதையும் அந்த விளம்பரங்கள் நினைவுபடுத்தின.
பிரதமராக பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் நஜிப் அறிமுகம் செய்துள்ள அரசாங்க உருமாற்றத்
திட்டங்களின் கீழ் அடையப்பட்டுள்ள சாதனைகளை விளக்குவதே ” நமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்” (Janji Ditepati) என்ற இயக்கத்தின் நோக்கமாகும்.
ஜுன் மாத வாக்கில் நடத்தப்படும் என ஆரூடங்கள் வலுத்து வரும் வேளையில் தமக்கு ஆதரவைப் பெருக்குவதற்கு நஜிப் மேற்கொள்ளும் இறுதி நடவடிக்கையாக அந்த இயக்கம் கருதப்படுகிறது.
நஜிப் பிரதமர் பொறுப்பை ஏற்று மூன்று ஆண்டுகள் முடிந்ததையும் குறிக்கும் அந்த இயக்கம் கடந்த திங்கட்கிழமை அவர் தொலைக்காட்சி வழி உரையாற்றியதுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 9 இடங்களில் அவர் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் முதலாவதாக கடந்த ஞாயிற்றுக் கிழமை பத்து பகாட்டுக்குச் சென்றார். அங்கு அவர் பங்கு கொண்ட நிகழ்வுகளில் ஜோகூர் மாநிலம் முழுவதையும் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.