PTPTN என்ற தேசிய உயர் கல்வி நிதிக்கு மாணவர்கள் செலுத்த வேண்டிய 24.7 பில்லியன் ரிங்கிட் கடனை எண்ணெய், எரிவாயு வருமானத்தைக் கொண்டு ஆண்டுக்கு வெறும் 2 பில்லியன் ரிங்கிட் நிதி அளிப்பதின் மூலம் 15 ஆண்டுகளில் சமாளிக்க முடியும் என பிகேஆர் கூறுகிறது.
அந்த 2 பில்லியன் ரிங்கிட் என்பது அரசாங்கத்தின் எண்ணெய் எரிவாயு வருமானத்தில் வெறும் சிறிய பகுதியே என்று அதன் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்நிய எண்னெய் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் வரிகள் உட்பட 2010ம் ஆண்டு அரசாங்கத்துக்கு 59.8 பில்லியன் ரிங்கிட் வருவாயாகக் கிடைத்தது.
ராபிஸி நேற்றிரவு ஷா அலாமில் மாணவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது பேசினார்.
திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றவர்களுடைய PTPTN கடன்களை வராத கணக்கில் எழுத பிகேஆர் திட்டமிட்டுள்ளது மீது ஒரு வழிமுறையைக் காண்பிக்குமாறு அந்தக் கலந்துரையாடலின் போது அவரிடம் கோரப்பட்டது.
“மற்ற நாடுகளில் எண்ணெய், எரிவாயு வருமானங்கள் எதிர்காலத்துக்கு குறிப்பாக ஆராய்ச்சி, கல்வி போன்ற துறைகளில் முதலீடு செய்யும் நோக்கத்துடன் தனி நிதியில் சேர்க்கப்படுகின்றன என அந்த முன்னாள் பெட்ரோனாஸ் முதுநிலை நிர்வாகி கூறினார்.
கடந்த சனிக்கிழமை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குறிப்பிட்ட 43 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படும் என்பது தவறானது என்றார் ராபிஸி. காரணம் அது அங்கீகரிக்கப்பட்ட தொகை ஆகும். ஆனால் அது இன்னும் விநியோகம் செய்யப்படவில்லை..
2010ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அந்த நிதியிலிருந்து 24.9 பில்லியன் ரிங்கிட் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதை PTPTN ஆவணங்கள் உணர்த்துகின்றன.
“43 பில்லியன் ரிங்கிட் என்பது பொய். பிரதமர் 43 பில்லியன் ரிங்கிட் எனச் சொன்ன போது அவர் அப்பட்டமாக பொய் சொல்கிறார். அவருக்கு ஒரு வேளை தவறான தகவல் கொடுக்கப்பட்டிருக்கலாம்.”
“அது உண்மையில் பாதிதான் என்பதை PTPTN ஆவணங்கள் காட்டுகின்றன.”
ஏற்கனவே செலுத்தியவர்களுக்குக் கழிவு கொடுக்கலாம்
தங்களது PTPTN கடன்களை திருப்பிச் செலுத்தியவர்களுக்கு அல்லது திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கின்றவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் 2011ம் ஆண்டு வரை திருப்பிப் பெறப்பட்ட 2.8 பில்லியன் ரிங்கிட்டுக்கு முழுமையாக அல்லது ஒரு பகுதி கழிவு வழங்கப்பட வேண்டும் என்றும் ராபிஸி யோசனை கூறினார்.