தலைமை நீதிபதி: பிரதமருடன் சந்திப்பு வழக்கமானதுதான்

இன்று நீதிபதிகள் மாநாட்டின்போது நீதிபதிகள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திப்பதை வைத்து நீதித்துறை அதன் சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பதாக  யாரும் பொருள் கொள்ளக்கூடாது என்று பணி ஓய்வுபெறும் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஸாக்கி,  அக்கூட்டத்தில் நீதித்துறையின் சேவையை மேம்படுத்த அரசாங்க நிதி எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்து பிரதமருக்கு விளக்கப்படும் என்றார்.

நீதிமன்ற நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்கும் பதிவுருக்களைக் கணினியில் கோத்து வைப்பதற்கும் ரிம130மில்லியன் ஒதுக்கீட்டுக்கு நீதித்துறை கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திங்கள்கிழமை பணிஓய்வு பெறும் ஸாக்கி,66, நீதிபதிகள்/பிரதமர் சந்திப்பு  ஒன்றும் புதிதில்லை என்றார். மஹாதிர் முகம்மட் காலத்திலும் இப்படிப்பட்ட சந்திப்புகள் இரண்டு தடவை நடந்துள்ளன.

“இது (சில தரப்பினர் கூறுவதுபோல்) வழக்கத்துக்கு மாறான ஒன்றல்ல. நீதிபதிகளின் மாநாடு ஆறு மாதங்களுக்குமுன்பே திட்டமிடப்பட்ட ஒன்று. பிரதமர் நீதிமன்ற வளாகத்துக்கு வருகை புரிய விரும்புவது கடந்த வாரம்தான் தெரிய வந்தது.

“இந்தச் சந்திப்பில் ஒளிவுமறைவு ஒன்றும் கிடையாது.இது எந்த வகையிலும் தீர்ப்பளிப்பதில் எங்களுக்குள்ள சுதந்திரத்தையோ நடுநிலைப் போக்கையோ பாதிக்காது.”

இது திறந்தநிலை சந்திப்புத்தான், அனைவரும் அதைப் பார்க்கலாம் என்று ஸாக்கி குறிப்பிட்டார்.

இன்று முறையீட்டு நீதிமன்ற, கூட்டரசு நீதிபதிகளின் மாநாடு நடைபெறுவதாக தெரிகிறது. அப்போது நீதிபதிகள் பிரதமரைச் சந்திப்பார்கள்.