பிஎஸ்சி அறிக்கை தொடர்பில் பக்காத்தான் எம்பி-க்கள் குறித்து அம்பிகா ஏமாற்றம்

பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் இசி என்ற தேர்தல் ஆணையம், குழுவின் முக்கிய பரிந்துரைகள் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்க வேண்டும் என வலியுறுத்தத் தவறி விட்டது குறித்து பெர்சே 2.0 கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் பக்காத்தான் எம்பி-க்கள் மீது ஆத்திரமாக இருக்கிறோம். 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அது அமலாக்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தாமல் அவர்கள் எப்படி அந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு  அனுமதித்தனர்?” என அவர் வினவினார்.

அம்பிகா இன்று பங்சாரில் 50 இளைஞர்கள் பங்கு கொண்ட கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில் பேசினார்.

UndiMalaysia என்னும் அமைப்பு ஏற்பாடு செய்த அந்த நிகழ்வின் நோக்கம் பெர்சே 3.0க்கான தேவையை எடுத்துக் கூறுவதாகும்.

பெரும்பாலும் ஜுன் மாதம் தேர்தல் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த பிஎஸ்சி அறிக்கை பயனற்றதாகி இறுதியில் வெறும் நீண்ட கட்டுரையாகவே இருக்கும் என்றார் அவர்,

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பெர்சே 2.0 பேரணி வெளியிட்ட கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை பிஎஸ்சி பூர்த்தி செய்துள்ளதாக கூறப்படுவதையும் அம்பிகா நிராகரித்தார்.

“பூர்த்தி செய்யப்பட்டது” என்னும் சொற்றொடர் எங்களுக்கு எரிச்சலைத் தருகிறது. பூர்த்தி செய்வது என்றால் என்ன அர்த்தம்? 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் அவை நிறைவேறும் என்பதே அதன் பொருள் ஆகும்.”
 
“நாங்கள் கேட்பது எல்லாம் அதுதான். அதனை நிறைவேற்றுங்கள். நாங்கள் பின்வாங்குகிறோம்,” என்றார் அம்பிகா.

“தேர்தல் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் ஏப்ரல் 28ம் தேதி மெர்தேக்கா அரங்கில் பெர்சே 3.0ஐ நடத்துவதற்கான தேவை அதிகரித்துள்ளது.”

“நீங்கள் ஜுன் மாதம் தேர்தலை நடத்த அவசரப்படுகின்றீர்கள். ஆகவே நீங்கள் எங்களுக்குத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பை கொடுக்கவில்லை. நாம் நமது நிலையை வெளிப்படுத்த வேண்டும். சீர்திருத்தங்களை அமலாக்குவதற்கு தேர்தலை தாமதப்படுத்த வேண்டும் என அரசாங்கத்துக்கு நாம் சொல்ல வேண்டும்.”

“நீங்கள் (அரசாங்கத்தில் உள்ளவர்கள்) தேர்தலை நடத்த அவசரப்படுகின்றீர்கள். அதனால் நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்க அவசரப்படுகிறோம்.”

“தேர்தல் நடத்தப்படும் என்னும் மருட்டலை நிறுத்திக் கொள்ளுங்கள் என நாங்கள் சொல்கிறோம். உங்களுக்கு சீர்திருத்தங்கள்  உண்மையாக இருந்தால் 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அதனை நடத்திக் காட்டுங்கள்,” என்றார் அம்பிகா.

TAGS: