ஷா ஆலம் எம்பி காலிட் சமட், சில இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றுகூடி சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமைக் கவிழ்க்க சதி செய்வதாகச் சந்தேகிக்கிறார்.
ஆகஸ்ட் 3-ல், பெட்டாலிங் ஜெயா தேவாலயம் ஒன்றில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்) மேற்கொண்ட சோதனை தொடர்பில் மந்திரி புசார் கைக்கொண்ட அணுகுமுறை குறித்து சில அமைப்புகள் “தனிக்கூட்டம் போட்டு” விவாதித்ததாக வெளிவந்த தகவல் இப்படிப்பட்ட சந்தேகத்தை அவரிடம் தோற்றுவித்துள்ளது.
“முஸ்லிம் என்ஜிஓ-கள், ஜயிஸ், சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத்(மயிஸ்) தலைவர் (முகம்மட்) அட்சிப் (இசா), சட்டத்துறைத் தலைவர் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் தனிக்கூட்டம் நடத்தியதாக அறிய வருகிறேன்.”
“அதில் அவர்கள் கிறிஸ்துவமய விவகாரத்தில் எம்பியைத் தாக்கி சிலாங்கூர் சுல்தானுக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைப்பது பற்றி விவாதித்ததாகத் தெரிகிறது”, என்றவர் தம் வலைப்பதிவில் கூறியிருந்தார்.
தனிக்கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறும் காலிட், அது பற்றி விரிவான தகவல்களைத் தரவில்லை.
ஆகஸ்ட் 3 “அதிரடிச் சோதனை”யைக் குறைகூறி வருபவரான காலிட், முகமட் கீர் தோயோ மந்திரி புசாராக இருந்த காலத்தில் இப்படிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படாதது ஏன் என்றும் வினவுகிறார்.
“கீர் காலத்தில் பிஎன் சிலாங்கூரைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தது. மாயிஸ், ஜயிஸ், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் எதுவும் வாய் திறக்கவில்லை.
“இப்போது ஊழலற்ற, மக்களின் நலனை மதிக்கும் ஒரு மந்திரி புசார் பலவாறும் தாக்கப்படுகிறார்.”
பிஎன் ஆட்சியின்போது, சடங்குபூர்வ நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர சுல்தான் மாநில நிர்வாகத்தில் தலையிட்டதே இல்லை என்பதையும் காலிட் சுட்டிக்காட்டினார்.
“இப்போது சுல்தான் அடிக்கடி மந்திரி புசாரைக் கண்டிக்கிறார். இதற்கெல்லாம் காரணம் அம்னோதான்”, என்றாரவர்.
ஜயிஸின் நடவடிக்கையைக் குறைகூறும் வழக்கத்தைக் கொண்டுள்ள காலிட், அந்த இஸ்லாமிய விவகாரத்துறை டியுஎம்சி விவகாரத்தில் அறிக்கை சமர்பிக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டிருப்பதை வாய்ப்பாகப் பயன்படுத்திகொண்டு அதைச் சாடியுள்ளார்.
“சோதனை செய்யும்போது விரைந்து செயல்பட்ட ஜயிஸ் சோதனை குறித்து அறிக்கையைச் சமர்பிக்க தாமதம் காண்பிப்பது நன்றாக இல்லை.
“அறிக்கையைத் தயாரிக்க பல மாதங்கள் ஆவதால், பிரமாதமான அறிக்கையாகத்தான் அது இருக்க வேண்டும், பொறுத்திருந்து பார்ப்போம்”, என்றும் கிண்டலடித்தார்.
நேற்று மந்திரி புசார் காலிட், ஜயிஸ் அறிக்கை செப்டம்பர் 16-ல் தயாராகிவிடும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.