பினாங்கு பிகேஆர் வேட்பாளர் பட்டியல் முழுமை பெற இன்னும் ஒர் இடம் மட்டுமே முடிவாக வேண்டும்

பினாங்கில் அடுத்த பொதுத் தேர்தலுக்கு குறிப்பிட்ட ஒர் இடம் பற்றிய விவாதங்கள் மட்டுமே நிகழ வேண்டும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.  பிகேஆர் வேட்பாளர் பட்டியல் முழுமை பெறுவதற்கு அது இன்னும் தடையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நடப்பு மாநில சட்ட மன்ற உறுப்பினர் சின் சூ ஜின் வசம் இருக்கும் பந்தாய் ஜெரேஜாக் தொகுதியே அந்த இடம் என ஊகங்கள் ஏற்கனவே பரவியுள்ளன.

தற்போது முன்னாள் பிகேஆர் உறுப்பினரும் இப்போது பிஎன் நட்புறவு எம்பி-யுமான  ஸாஹ்ரெய்ன் முகமட் ஹஷிம் வசம் இருக்கும் பாயான் பாரு நாடாளுமன்றத் தொகுதியை சிம் குறி வைத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

ஆனால் சிம் அந்த விவகாரம் மீது ஏதும் கருத்துரைக்க மறுத்து விட்டார். நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி முடிவு செய்வது கட்சித் தலைமைத்துவதைச் சார்ந்துள்ளது என்றார் அவர்.

பந்தாய் ஜெரேஜாக் தொகுதிக்கான உத்தேச வேட்பாளர் பற்றிய தங்களது கவலையைத் தெரிவிப்பதற்காக அண்மையில் 20 கட்சி உறுப்பினர்கள் மாநில பிகேஆர் தலைவரும் முதலாவது துணை முதலமைச்சருமான  மான்சோர் ஒஸ்மானைச் சந்தித்தாக மலேசியாகினி அறிகிறது.

பினாங்கு நகராட்சி மன்ற உறுப்பினரான ரஷிட் ஹான்சோர் அங்கு நிறுத்தப்படலாம் என்பதை அறிந்த அவர்கள் அதனை ஒப்புக் கொள்ளவில்லை.

இப்போது பிகேஆர் சீன வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகள், ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்ற நிலை தொடர வேண்டும் அந்த 20 பேரில் ஒருவர் கூறினார்.

“பந்தாய் ஜெரேஜாக் சீனர் பெரும்பான்மைத் தொகுதி என்பதால் நாங்கள் எங்கள் கவலையைத் தெரிவிதோம்,” என அடையாளம் கூற விரும்பாத அவர் சொன்னார்.

“நாங்கள் இதனை இனப் பிரச்னையாக்க விரும்பவில்லை. என்றாலும் எல்லா இனங்களும் பொருத்தமான முறையில் பிரதிநிதிக்கப்படுவதை உறுதி செய்ய பிகேஆர் சீன வேட்பாளர்களுக்கு ஐந்து சட்டமன்றத் தொகுதிகள், ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்ற முந்திய வழி முறை தொடர்ந்து நிலை நாட்டப்பட வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம்,” என்றும் அவர் சொன்னார்.

“மேலும் விவாதங்கள்” தேவைப்படுவதாக அன்வார் குறிப்பிட்டது பந்தாய் ஜெரேஜாக் என சொல்லப்படுவதை தொடர்பு கொள்ளப்பட்ட போது சிம் மறுத்தார்.

பாஸ் கட்சி அல்லது டிஏபி-யுடன் இன்னும் முழுமை பெறாத இட ஒதுக்கீடுகள் பற்றி அன்வார் கூறியிருக்கலாம் என்றார் அவர்.

ஒவ்வொரு கிளையும் மூன்று வேட்பாளர்களை முன்மொழிந்துள்ள போதிலும் வேட்பாளர் பட்டியல் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் சிம் குறிப்பிட்டார்.

என்றாலும் 20 பேர் கொண்ட குழுவினரும் பாயான் பாரு தலைமைத்துவமும் மாநில கட்சித் தலைவர் மான்சோரைச் சந்தித்து தங்களது கருத்துக்கள தெரிவித்துக் கொண்டதை அவர் ஒப்புக் கொண்டார்.

“எந்த இடத்துக்கு யாரை நிறுத்துவது என்பதை முடிவு செய்யும் பொறுப்பை கட்சித் தலைமைத்துவத்திடம் நாம் விட்டு விடுவோம்.”

“பிகேஆர் பல இன, ஜனநாயகக் கட்சி, இன சமய வேறுபாடின்றி கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களையே நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் சிம்.

பாயான் பாரு பிகேஆர்- கட்சிக்கு முக்கியமானதாகும். ஏனெனில் அந்த நாடாளுமன்றத் தொகுதியும் அதன் கீழ் உள்ள பந்தார் ஜெரேஜாக், பத்து மாவ்ங் (அப்துல் மாலிம் அபு காசிம்), பத்து உபான் (எஸ் ரவிந்திரன்) ஆகியவையும் பிகேஆர் வசம் உள்ளன.

TAGS: