பினாங்கில் ஊராட்சி மன்றத் தேர்தல்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை

12வது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையில் பக்காத்தான் ராக்யாட் வாக்களிக்கப்பட்டதற்கு இணங்க பினாங்கு மாநில அரசாங்கம் அந்த மாநிலத்தில் ஊராட்சி மன்றத் தேர்தல்களை மீண்டும் நடத்துவதற்கான வழிகள் பற்றி பொது விவாதங்களுக்கு ஏற்பாடு செய்யவிருக்கிறது.

மாநில அரசாங்கம் தயாரித்துள்ள பினாங்குத் தீவு, பிராவின்ஸ் வெல்லஸ்லி-யில் ஊராட்சி மன்றத் தேர்தல்களுக்கான நகல் சட்டம் சனிக்கிழமை நிகழும் பொது விவாதங்களில் பேசப்படும் என முதலமைச்சர் அலுவலகத்தைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் அண்ட்ரூ யோங் கூறினார்.

“அடுத்து அந்த மசோதா ஏப்ரல் 30ம் தேதி தொடங்கும் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.”

“சிவில் சமூக அமைப்புக்கள் அந்த மசோதா குறித்த தங்கள் கருத்துக்களை அரசாங்கத்திடம் தெரிவிக்க அந்த விவாதம் உதவும் என அந்த நிகழ்வுக்கு அனுசரணையாளராக விளங்கும் யோங் குறிப்பிட்டார்.

கொம்தார் கட்டிடத்தில் ஐந்தாம் மாட்டியில் உள்ள ஏ அரங்கில் மூன்று மணி நேரத்துக்கு அந்த விவாதம் நிகழும். மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் சாவ் கோன் இயாவ், அரசமைப்புச் சட்ட வழக்குரைஞர் டோமி தாமஸ், அலிரான் தலைவர் பிரான்சிஸ் லாவ், கோமாஸ் அமைப்பின் ஜெரால் ஜோசப் ஆகியோர் அந்த நிகழ்வில் உரையாற்றுவார்கள்.

அந்த விவாதம் இரண்டு நோக்கங்களைக் கொண்டது என்றார் யோங். சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் நகல் மசோதாவை ஆய்வு செய்வது, பினாங்கில் ஊராட்சி மன்றத் தேர்தல்களை மீண்டும் நடத்துவதற்கான வழிகளை ஆராய்வது ஆகியவையே அவை.

ஊராட்சி மன்றத் தேர்தல்களை மீண்டும் நடத்துவதற்கான போராட்டம் கூட்டரசு அரசாங்கத்துக்கு நட்புறவான தேர்தல் ஆணையத்திடமிருந்து முட்டுக்கட்டைகளை எதிர்நோக்குகிறது.

பல முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் பினாங்கில் ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த பிரதமர் துறையின் கீழ் இயங்கும் தேர்தல் ஆணையம் தயாராக இல்லை.

TAGS: