மெர்தேக்கா சதுக்கத்தை விட்டு வெளியேற குந்தியிருப்பாளர்கள் மறுப்பு

மெர்தேக்கா சதுக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் குந்தியிருப்பாளர்கள் இன்று காலை 11 மணிக்குள் தங்கள் முகாம்களை கலைத்து விட்டும் அந்தப் பகுதியை ‘சுத்தம்’ செய்ய வேண்டும் என டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தைச் சேர்ந்த 10 அமலாக்க அதிகாரிகள் ஆணையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களது பதாதைகளையும் அட்டைகளையும் தங்களது முகாம் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் கொண்டு சென்றனர். அத்துடன் ஒரு கூடாரத்தையும் அகற்றினர்.

அவர்கள் சில பொருட்களை அந்தச் சதுக்கத்திற்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள கார் நிறுத்துமிடத்துக்கு கொண்டு செல்வதும் தெரிந்தது.

அது குறித்து கருத்துக் கேட்ட போது சமூகப் போராளியான பாஹ்மி ரெஸா இவ்வாறு கூறினார்: “எங்கள் முகாமை கலைக்குமாறு அவர்கள் எங்களைக் கேட்டுக் கொண்டனர். அதனால் நாங்கள் ஒரு கூடாரத்தைக் கலைத்து விட்டோம். ஆனால் நாங்கள் எங்கும் போகவில்லை. நாங்கள் இங்கு தொடர்ந்து இருப்போம்.”

டிபிகேஎல் அதிகாரிகளும் ஐந்து போலீஸ் அதிகாரிகளும் அங்குள்ள 10 மாணவர்களையும் போராளிகளையும் அணுக்கமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்று காலை தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிஸ் லீ அந்த மாணவர்களைச் சந்தித்தார். உணவுப் பொருட்களையு சுவை பானங்களையும் கொண்டு வந்த அவர் மாணவர்களுக்கு  ஊக்கமூட்டும் சொற்களையும் கூறினார்.

TAGS: