மாட் சாபுவின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும்

கம்யூனிச பயங்கரவாதிகளை வீரர்களென்றும் நாட்டின் பாதுகாப்பு படையினரின் நற்பெயரை களங்கப்படுத்தியும் அறிவிக்கை விடுத்ததாக கூறப்படும் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகம்மட் சாபுவின் குடியுரிமையைப் பறிக்குமாறு கெடா முன்னாள் போலீஸ்காரர்கள் மன்றம் அரசாங்கத்தை இன்று கேட்டுக்கொண்டது.

மாட் சாபுவின் அறிக்கை பண்பற்றது மட்டுமல்ல. அது அம்மன்றத்தின் 5,000க்கு மேற்பட்ட உறுப்பினர்களின் உணர்வையும் புண்படுத்திவிட்டது என்று அம்மன்றத்தின் தலைவர் ஷரீப் கொந்தான் கூறினார்.

“மாட் சாபுவின் அறிக்கை அனைத்து இன மலேசியர்களையும் புண்படுத்திவிட்டது, குறிப்பாக கம்யூனிஸ்ட் கலவரத்திற்கு எதிராகப் போரிட்ட பாதுகாப்பு படைகளின் உறுப்பினர்களை”, என்று அவர் கூலிம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று ஒரு போலீஸ் புகாரைச் செய்த பின்னர் கூறினார்.

கடந்த திங்கள்கிழமை ஒரு போலீஸ் புகாரைச் செய்த பெர்காசா என்ற மலாய்க்காரர்களின் உரிமைக்காக போராடும் அமைப்பின் கூலிம் கிளை மாட் சாபுவின் அறிக்கை அரசாங்க எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டிவிடும் நோக்கம் கொண்டது என்று கூறிற்று.

“அவரின் அறிக்கை நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த ஆபத்தானது. அதிகாரிகள் முகம்மட் சாபுவை மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும், இசா சட்டத்தின்கீழ் தடுத்து வைப்பது உட்பட”, என்று அதன் தலைவர் ஹமிட் ஒத்மான் கூறினார்.

-பெர்னாமா

TAGS: