மாட் இந்ரா கம்யூனிஸ்டோ அல்லது மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரோ அல்ல என்று பிரிட்டிஷ் அரசாங்கம் துரோகி என்று முத்திரை குத்திய அந்த சுதந்திரப் போராட்ட வீரருடைய சகோதரர் ஒருவர் கூறுகிறார்.
அவர் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக ஒரு போதும் இருந்தது இல்லை. அத்துடன் அவர் கம்யூனிஸ்ட்டும் அல்ல”, என பாஹாரும் ஷா இந்ரா வலியுறுத்தினார்.
அவர் இன்று கோலாலம்பூரில் உள்ள பாஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார். பாஹாரும் இராணுவத்தில் வேலை செய்து ஒய்வு பெற்றவர் ஆவார்.
மாட் இந்ரா Angkatan Pemuda Insaf (API), Parti Kebangsaan Melayu Malaya (PKMM) போன்ற தேசியவாத அமைப்புக்களில் தீவிரமாக பங்காற்றியதாகவும் அவர் சொன்னார்.
அந்த உண்மைகள் ஜோகூர் மாநில அரசாங்கம் வெளியிட்டுள்ள “கொண்டாடப்படும் ஜோகூர் பெருமக்கள்” ( Pengukir Nama Johor ) என்னும் புத்தகத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
அந்தப் புத்தகத்தில் மாட் இந்ராவுக்கு குறிப்பிடத்தக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியப் போதனைகளில் ஈடுபாடு
அம்னோ தவிர எல்லா சுதந்திரப் போராட்ட அமைப்புக்களும் சட்டவிரோதமானவை என பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகள் அறிவித்த பின்னரே தமது சகோதரர் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி காடுகளில் வழி நடத்திய ரகசிய அமைப்பில் சேர்ந்தார் என பாஹாரும் சொன்னார்.
கம்யூனிஸ்ட் தலைமையிலான தலைமறைவு இயக்கத்தையும் பிரிட்டிஷார் அங்கீகரித்த அம்னோவையும் தவிர சுதந்திரத்துக்கு போராடுவதற்கு வேறு வழிகள் ஏதுமில்லை என்பதே அதற்குக் காரணம் ஆகும்.
என்றாலும் காடுகளில் வசித்த போது மாட் இந்ரா ஒரு போதும் கம்யூனிஸ்டாக மாறியதில்லை என அவர் வலியுறுத்தினார். காரணம் அவர் இஸ்லாமிய போதனைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தது அனைவருக்கும் தெரியும்.
உண்மையில் தமது சகோதரர் கம்யூனிஸ்ட்களுக்கு காட்டில் இருந்த போது சமயத்தைப் போதித்ததாக பாஹாரும் விளக்கினார்.
அதற்கு என்ன ஆதாரம் என அவரிடம் வினவப்பட்ட போது தமது சகோதரர் போதித்தவர்களிடமிருந்து சாட்சியங்களைத் தாம் இப்போது திரட்டிக் கொண்டிருப்பதாக பாஹாரும் சொன்னார்.
மாட் இந்ரா சமயப் பள்ளி ஒன்றில் துணைப் பிரதமர் முஹைடின் யாசினின் தந்தையாரிடம் கல்வி கற்றவர் என நேற்று மாட் இந்ராவின் இன்னொரு சகோதரர் குறிப்பிட்டார். மாட் இந்ரா பின்னர் பல அரசாங்க சமயப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
தமது சகோதரரை உண்மையான சுதந்திரப் போராட்ட வீரராக அங்கீகரிக்குமாறு பாஹாரும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். நமது எஜமானர்களாக இருந்தவர்கள் ஒரு காலத்தில் எழுதிய வரலாற்றிலிருந்து மக்களை விடுவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
பிரிட்டிஷார் மாட் இந்ராவை ‘துரோகி’ என முத்திரை குத்திய போது தமது குடும்பம் பெரும் அவமானப்படுத்தப்பட்டு கேலி செய்யப்பட்டதாக பாஹாரும் குறிப்பிட்டார். அந்த முத்திரை நீக்கப்பட்டு தமது சகோதரருடைய பெருமை நிலை நாட்டப்பட வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் அவர் சொன்னார்.