புக்கிட் செப்போங் தாக்குதலில் சம்பந்தப்பட்ட மாட் இந்ரா என அடையாளம் காணப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் பயங்கரவாதி தேசிய வீரராகக் கருதப்பட வேண்டும் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை மீதான புலனாய்வைப் போலீசார் முடித்து கொண்டுள்ளனர்.
அந்த புலனாய்வுப் பத்திரங்கள் ஆய்வு செய்யப்படுவதற்காக புக்கிட் அமானில் உள்ள போலீஸ் தலைமையகத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு போலீஸ் படைத் தலைவர் அயூப் யாக்கோப் கூறினார்.
அண்மைய எதிர்காலத்தில் அது சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கும் அவை அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாட் சாபு என்றும் அழைக்கப்படும் பாஸ் துணைத் தலைவரிடமிருந்து வாக்குமூலத்தைப் போலீசார் பதிவு செய்தார்கள் என்றும் அயூப் தெரிவித்தார்.
“நிருபர்கள், சுயேச்சையான சாட்சிகள், போலீஸில் புகார் செய்தவர்கள் ஆகிய 68 பேரிடமிருந்து வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர்.”
மாட் சாபு மீது குற்றம் சாட்டப்படுமா இல்லையா என்பது சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தைப் பொறுத்தது என அவர் மேலும் கூறினார்.
பொது மக்கள் ஆத்திரப்படுவதற்கு வழி வகுக்கும் அறிக்கையை வெளியிட்டதற்காகவும் குற்றவியல் சட்டத்தின் 505(பி) பிரிவின் மீழும் முகமட் சாபு விசாரிக்கப்படுவதாகவும் அயூப் தெரிவித்தார்.
நாடு முழுவதும் நேற்று வரை மாட் சாபுவுக்கு எதிராக 262 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.