மாட் இந்ரா பற்றி முன்னதாக கூறியுள்ள கருத்துகளால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளைப் பொருட்படுத்தாமல், பாஸ் கட்சியின் துணைத் தலைவர் மாட் சாபு இப்போது புதியதோர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். பொது வாக்கெடுப்பு எடுக்கப்பட்டிருந்தால் துங்கு அப்துல் ரஹ்மான நாட்டின் முதலாவது பிரதமராகி இருக்க முடியாது என்று அவர் கூறுகிறார்.
பிரிட்டீசாரால் தடைசெய்யப்பட்டு ஒடுக்கப்பட்ட இடதுசாரியினர் நடத்திய சுதந்திரப் போராட்டம் மக்களிடையே அதிகமான ஆதரவைப் பெற்றிருந்தது என்றாரவர்.
“துங்கு அப்துல் ரஹ்மான், (அம்னோவை தோற்றுவித்த) டத்தோ ஓன் பின் (ஜாபர்) மற்றும் (இடதுசாரி தலைவர்) புர்ஹானுடின் ஹெல்மி ஆகியோர் ஒரு பொது வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தால், நிச்சயமாக புன்ஹானுடின் ஹெல்மி மலேசியாவின் முதல் பிரதமராகி இருப்பார்”, என்று மாட் சாபு கூறினார்.
“ஆனால், அவர்கள் (இடதுசாரியினர்) கைது செய்யப்பட்டனர், கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களுடைய அமைப்புகள் தடைசெய்யப்பட்டன”, என்று அவர் கோலாலம்பூரில் நேற்றிரவு சுமார் 500 பேர் பங்கேற்ற கருத்தரங்கில் கூறினார்.
நாட்டின் சுதந்திரத்தை “அடைப்புக் குறிக்குள் மெர்தேக்கா” என்று வர்ணித்த மாட் சாபு, சுதந்திரம் பெற்றதில் அம்னோவின் பங்களிப்பை அவர் மறுக்கவில்லை, ஆனால் இதர தலைவர்கள் ஆற்றிய சேவையை ஓரங்கட்டுதல் கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார்.
“சுதந்திர தின கொண்டாட்டங்கள் அம்னோ கொண்டாட்டங்கள் போன்றதாகி விட்டன. புர்ஹானுடின், அஹ்மட் போஸ்தாமாம், மாட் கிலாவ்…ஆகியோரின் படங்களை ஒளி பரப்ப வேண்டும். அப்போதுதான் மக்கள் மெர்தேக்கா தின கொண்டாட்டத்தில் பங்கேற்க ஈர்க்கப்படுவர்.
“இப்போது அம்னோ மட்டும் கொண்டாடுகிறது”, என்று அவர் கிண்டலாக கூறியபோது அங்கிருந்தவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.
கம்யூனிச அனுதாபி என்று அம்னோவால் சித்தரிக்கப்பட்ட, அம்னோவிக்கு சொந்தமான உத்துசான் மலேசியாவால் கடுமையாகச் சாடப்பட்ட அந்த தன்னிச்சையாகச் செயல்படும் அரசியல்வாதி மாட் சாபு, மேலும் ஒரு படி சென்று மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சின் பெங் ஒரு பயங்கரவாதியா என்று வினவினார்.
மாட் சாபுவின் கூற்றுப்படி, மலாயாவின் அன்றைய பிரிட்டீஷ் ஹைகமிசனர் சர் ஹென்றி கர்னியின் மரணம் சின் பெங்கின் பொறுப்பாகும். ஹென்றி கர்னி மலாயாவிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியிருப்பை உருவாக்கியவர்.
“மலாயாவை ஆண்ட ஹென்றி கர்னியை சின் பெங் கொன்றார். நான் கேட்கிறேன், இவர்களில் யார் நல்லவர்? ஹென்றி கர்னி, சின் பெங்?
“நான் பதில் அளிக்க விரும்பவில்லை. நான் தவறாக கூறினால், நாளை என் கதை முடிந்தது. அது பற்றி நீங்கள் சிந்தியுங்கள்”, என்று நகைச்சுவைக்கு பேர் பெற்ற அந்த அரசியல்வாதி கூறினார்.