வாக்காளர் பட்டியலில் அஞ்சல் வாக்காளர்கள் தொடர்பில் பல தவறுகள் நிகழ்திருப்பது தெரிய வருவதால் இராணுவத்தினரின் கணவர்/மனைவிமார்களின் அஞ்சல் வாக்குகளை தேர்தல் ஆணையம்(இசி) ஒழித்துக்கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் கணவர்/மனைவிமார்கள், வாக்களிப்பு நாளில் கடமையில் இருப்பர்கள் அல்லர். எனவே அவர்கள் அஞ்சல்வாக்காளர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று டிஏபி உதவி ஒருங்கிணைப்புச் செயலாளர் வின்செண்ட் வூ இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் அவர்கள் அஞ்சல்வழிதான் வாக்களிக்க வேண்டும் இசி ஏன் எதிர்ப்பார்க்கிறது என்பது அவருக்குப் புரியவில்லை.
நடப்பு தேர்தல் சட்டப்படி, இராணுவத்தினர் அல்லது போலீசாரின் கணவன்/மனைவிமார் அவர்கள் விருப்பப்படி சாதாரண வாக்காளர்களாக அல்லது அஞ்சல்வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ளலாம்.
அஞ்சல் வாக்களிப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால் அதில் தில்லுமுள்ளு நிலவ வாய்ப்புள்ளது என்று கூறி மாற்றரசுக்கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
செவ்வாய்க்கிழமை டிஏபி இளைஞர் பகுதித் தலைவர் அந்தோனி லோக், 24 இராணுவ அதிகாரிகளின் மனைவிகள்/ கணவர்கள் இராணுவத்தில் பணியாற்றும் தங்களது கணவர் அல்லது மனைவிமார் அடையாளக் கார்டு எண்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டார்.
“கணவர்களுடைய சாதாரண அடையாளக் கார்டு எண்களில் மனைவிமார் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படுகின்றனர்.இது போக, மனைவிமார் அவர்களின் சொந்த அடையாளக் கார்டு எண்களிலும் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருப்பார்கள். இதனால் ஒரு மனைவி இரண்டு தடவை வாக்களிக்க முடியும் என்றாகிறது”என ராசா எம்பியான லோக்.
தமது அறிக்கையில் வூ, இசி அஞ்சல் வாக்களிப்புமுறையைத் திருத்தி அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இப்போது இசி, அஞ்சல் வாக்களிப்பை, முன்வாக்குப்பதிவாக மாற்றி அமைப்பது பற்றி ஆலோசித்து வருகிறது.முன்வாக்குப்பதிவில் அந்த வாக்களிப்பை அரசியல் கட்சிகளும் கண்காணிக்க வாய்ப்பு இருக்கும்.
ஒரு வார அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்
தேர்தல் ஆணையம் ஒவ்வொரு காலாண்டிலும் துணை வாக்காளர் பட்டியல் ஒன்றைத் தயாரித்து அதைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறது.பொதுமக்கள் அதை ஆராய்ந்து குற்றம்குறை இருந்தால் மறுப்புத் தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த அவகாசம் போதுமானதல்ல என்கிறார் வூ.
“அந்தப் பட்டியல் பல்லாயிரக்கணக்கான புதிய வாக்காளர்களின் பெயர்களைக் கொண்டிருக்கிறது. அதில் எல்லாம் சரியாக உள்ளது என்பதைக் கண்டறிய அரசியல் கட்சிகளுக்குக் கூடுதல் அவகாசம் தேவை”.
எனவே, மறுப்புத் தெரிவிக்கும் காலத்தை மூன்று மாதங்களாக நீட்டிக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
வாக்காளர் பட்டியலில் தவறுகள் காணப்படுமாயின் அவை குறித்து பொதுமக்கள் ஆட்சேபணை தெரிவிக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஆட்சேபணைக்கும் ரிம10 கட்டணமும் செலுத்த வேண்டும். அதே வேளையில் தெரிவிக்கப்படும் ஆட்சேபணை நிராகரிக்கப்படுமானால் நிராகரிக்கப்படும் ஒவ்வொரு ஆட்சேபணைக்கும் ரிம200 அபராதம் விதிக்கப்படும்.
இந்த அபராத விதிப்பை வூ குறைகூறினார்.இசி செய்த தவற்றுக்கு புகார்தாரரைப் பொறுப்பாக்கக்கூடாது என்றாரவர்.
கட்டணத்தையும் அபராதத்தையும் விட்டொழிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.