பிரதமர் நஜிப் ஃப்ரன்ச் நீதிமன்றத்தில் ஸ்கோர்ப்பீன் நீர்மூழ்கி விசாரணையில் சாட்சியமளிப்பது குறித்து தொடர்ந்து எதுவும் கூறாமல் இருப்பது மலேசிய அரசாங்கத்தின் மீது தவறான தோற்றத்தை உருவாக்குகிறது என்று டிஎபி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் டியோ கூறுகிறார்.
“நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து பாரிஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு விசாரணையில் சாட்சியமளிக்க நஜிப் தயக்கம் காட்டுவது மலேசியா மீது தவறான தோற்றத்தை ஏற்படுத்துகிறது”, நேற்றிரவு ஒரு மின்னஞ்சலில் கூறினார்.
“இது பிரதமரை மோசமான தோற்றத்தில் காட்டுகிறது. அவர் சீர்திருத்தங்களுக்கு உறுதியளித்தார், ஊழலை ஒழிப்பதற்கான ஈடுபாட்டை முன்வைத்தார்”, என்றார் கோபிந் சிங்.
“பிரதமர் என்ற முறையில் அவரின் அரசாங்கத்தைப் பாதிக்கும் அனைத்து விவகாரங்கள் குறித்தும் அவர் பேச வேண்டும். அது நாடு முழுவதுக்குமான நலன்களுக்கு உகந்ததாக, குறிப்பாக அனைத்துலக அளவில், இருக்கும்”, என்று அவர் மேலும் கூறினார்.
சுவாராம் என்ற மலேசிய மனித உரிமைக் கழகம் பிரன்ச் நீதிமன்றத்தில் செய்துள்ள புகார் மீது நடைபெறும் விசாரணையில் பிரதமர் நஜிப்பையும் தற்காப்பு அமைச்சர் அஹமட்
ஸாகிட் ஹமிடியையும் தங்களுடைய சாட்சிகள் பட்டியலில் சேர்த்துள்ளதால் அவர் சாட்சியமளிப்பாரா என்று ஞாயிற்றுக்கிழமை வினவப்பட்டபோது நஜிப் பதில் கூற மறுத்து விட்டார்.
“நான் கருத்துரைக்க விரும்பவில்லை…நான் கருத்துரைக்க விரும்பவில்லை, நன்றி”, என்று வெடுக்கென்று பதில் அளித்தார்.
சுவாராம் இந்த வழக்கை 2010 ஆம் ஆண்டில் பிரன்ச் தற்காப்பு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனமான டிசிஎன்எஸ்சுக்கு எதிராக பதிவு செய்தது. அந்நிறுவனம் இரண்டு ஸ்கோர்பீன் நீர்மூழ்கி கப்பல்களை மலேசிய அரசாங்கம் 2002 ஆம் ஆண்டில் கொள்முதல் செய்ததில் மலேசிய அதிகாரிகளுக்கு தரகுப் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பெரும்-எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள அவ்வழக்கு கடந்த வாரம் தொடங்கியது.