பெர்சே 3.0 குந்தியிருப்பு பேரணியை டாத்தாரான் மெர்தேக்காவில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் பக்கத்தான் தலைவராக டிஎபியின் செனட்டர் துங்கு அப்துல் அஸிஸ் துங்கு இப்ராகிம் விளங்குகிறார்.
தெருப் போராட்டங்களை தாம் எதிர்ப்பதாக டிஎபியின் உதவித் தலைவருமான துங்கு அப்துல் அஸிஸ் கூறுகிறார். சனிக்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அந்நிகழ்வு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கிறார்.
“அவை அனைத்தும் அமைதியான நோக்கத்துடன் தொடங்கும், எவரும் குழப்பத்தை உண்டுபண்ண விரும்புவதில்லை… ஆனால், அது வன்முறையாக மாறக்கூடும். அது நிகழும்போது, அதற்கு யார் பொறுப்பு?”, என்று அவர் வினவினார்.
“அப்பேரணியை டாத்தாரான் மெர்தேக்காவில் நடத்துவதற்கு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பது “பொறுப்பற்ற” செயலாகும் ஏனென்றால் அது சட்டத்தை மீறுகிறது என்று தாம் நம்புவதாக அவர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
அதிகாரிகள் அளிக்க முன்வந்துள்ள மாற்று இடத்தை பெர்சே ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏனென்றால் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து முடிவெடுப்பதில் அவர்கள் மேலானவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.
“முக்கிய நோக்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாகும். எங்கே என்பது ஏன் விவகாரமாக வேண்டும்? டிபிகேஎல் அதன் (டாத்தாரான் மெர்தேக்காவின்) உரிமையாளர்”, என்று அவர் கூறினார்.