முன்னாள் வீரர்களின் மகஜரை பாஸ் ஏற்றுக் கொள்ள மறுத்தது

1950ம் ஆண்டு நிகழ்ந்த புக்கிட் கெப்போங் சம்பவம் மீது பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு விடுத்த அறிக்கை மீது அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் இராணுவ வீரர்களின் ஆட்சேபக் கடிதத்தை ஏற்றுக் கொள்ள பாஸ் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

அந்த மகஜரைக் கொடுப்பதற்காக மலேசிய முன்னாள் போலீஸ்காரர்கள் சங்கம்,  மலேசிய முன்னாள் ஆயுதப் படைகள் சங்கம், மலாய் இராணுவ வீரர்கள் சங்கம், பல அரசு சாரா அமைப்புக்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 100 பேர் இன்று கோலாலம்பூரில் உள்ள பாஸ் தலைமையகக் கட்டிடத்துக்கு சென்றார்கள். ஆனால் அந்தக் கட்டிடத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன.

கட்சியின் மூத்த அதிகாரிகளிடமிருந்து உத்தரவு இல்லாததால் தாங்கள் அந்த ஒரு பக்க மகஜரை பெற்றுக் கொள்ள முடியாது என பாஸ் நிர்வாக ஊழியர் ஒருவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து  கட்டிடத்துக்கு வெளியில் நிருபர்களைச் சந்தித்த அந்தக் குழுவினர் முகமட் சாபுவை “அலி” என்றும் “கோழை” என்றும் அழைத்தனர். அப்போது 20 போலீஸ் அதிகாரிகள் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“அவர்கள் எங்களுக்குக் கதவுகளை மூடியது குறித்து நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். நாங்கள் சாதாரண மக்கள், சாதாரண சங்கங்கள், கடிதத்தைத்தான் அனுப்புகிறோம். துப்பாக்கி ரவையை அல்ல”, என மலேசிய முன்னாள் போலீஸ்காரர்கள் சங்கத் தலைவர் ஷாபியி பாக்ரி கூறினார்.

‘எங்கள் உணர்வுகள் காயமடைந்துள்ளன’

அமைதியாக நடந்து கொண்ட அந்தக் குழுவில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின் போது சண்டையிட்ட பல வீரர்களும் இருந்தார்கள். 30 நிமிடங்களுக்கு கூடிய அவர்கள் ‘Inilah Barisan Kita’ என்ற நாட்டுப்பற்றுப் பாடலை பாடிய பின்னர் புறப்பட்டுச் சென்றனர்.

தங்கள் கடிதத்தைப் பெறுவதற்கு முகமட் சாபு வர மாட்டார் எனத் தெளிவாகத் தெரிந்ததும் அவர்கள் ஆத்திரமடைந்து முகமட் சாபுவை இழிவான சொற்களில் வசை பாடினர்.

அனுமதி இல்லாததால் கலைந்து போகுமாறு போலீசார்  ஆணையிட்டதும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.

கட்டிடத்தின் கதவுகளுக்கு அருகில் மகஜரை விட்டுச் செல்ல ஷாபியி மறுத்து விட்டார். தங்களது கூற்றை மெய்பிப்பதற்கு “ஆயிரக்கணக்கான வீரர்களுடன்” திரும்பப் போவதாக அவர் சூளுரைத்தார்.

“மாட் இந்ராவும் கம்யூனிஸ்ட்களும் உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள் எனக் கூறியதின் மூலம் அவர் எங்கள் உணர்வுகளைக் காயப்படுத்தி விட்டார்.”

“நாங்கள் அந்த மகஜரை கதவுக்கு அருகில் விட்டுச் சென்றால் அது எங்களுக்குக் கிடைக்கவில்லை என பாஸ் சொல்லக் கூடும். அதனை நாய் தின்று விட்டது என்றும் கூறலாம்”, என அவர் காட்டாமாகக் கூறினார்.

“டிஏபி கூட எங்களுக்கு மரியாதை காட்டுகிறது”

குழுவிடமிருந்து மகஜரை ஏற்றுக் கொண்டதின் மூலம் டிஏபி கூட எங்களுக்கு மரியாதை தந்துள்ளது என  மலாய் இராணுவ வீரர்கள் சங்கத் தலைவர் முகமட் அலி பாஹாரும் கூறினார்.

முகமட் சாபு எங்களுக்கு குறிப்பாக இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்ட காலஞ்சென்ற முன்னாள் வீரர்களின் மனைவிகளுக்கு மரியாதை காட்ட வேண்டும் என்றார் அவர்.

பாஸ் துணைத் தலைவர் பதவியிலிருந்து முகமட் சாபு விலக வேண்டும் என்றும் பக்காத்தான் ராக்யாட்டில் தனது உறுப்பியத்தை அந்தக் கட்சி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்த மகஜர் கேட்டுக் கொண்டது.

பக்காத்தானில் சேர்ந்ததிலிருந்து பாஸ் கட்சி தனது உண்மையான போராட்டத்தை மறந்து விட்டது என்றும் அந்தக் குழு குறிப்பிட்டது.

பாஸ் கட்சி “வரலாற்று உண்மைகளைத் திருத்தக் கூடாது” என்றும் “கம்யூனிசத்துக்கு புத்துயிரூட்டுவதை” நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் மகஜரில் கூறப்பட்டுள்ளது.

முன் கூட்டியே ஏற்பாடு செய்யப்படாததால் அந்த முன்னாள் வீரர்கள் மகஜர் கொடுக்க விரும்பியது குறித்துத் தமக்கு ஏதும் தெரியாது என்று முகமட் சாபு பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

“அவர்கள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தால் நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டிருப்போம்”, என்றார் அவர்.

TAGS: