மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி: ம.இ.காவின் சவாலை சந்திக்க தயார், சேவியர்

ம.இ.கா இளைஞர் பகுதி தலைவர் T. மோகனின் அறிக்கை, இன்றைய மலேசிய நண்பனில் மிரட்டல் பாணியில் வெளிவந்துள்ளது.  இவரைப் போன்றப் பேர்வழிகளுக்குப் பல முறை, முறையாகப் பதில் அளிக்கப் பட்டுவிட்டது. ஆனால் இவர்களின் நோக்கம் சமுதாயம்  நன்மையடைய வேண்டுமென, இரவு பகலெனப் பார்க்காமல் பாடுப்பட்டு ஒரு மாபெரும் பள்ளியை நிர்மாணித்தவர்களின் பணியைக் கொச்சை படுத்துவதிலும், அப்படிப்பட்டவர்களைச் சமூகச் சேவைகளிலிருந்து  விரட்டுவதுமாக இருப்பது  நமக்கு வருத்தம் அளிக்கிறது.

இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகளை நிர்மாணிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு காலக்காலமாக, தமிழ்ப்பள்ளி ஒதுக்கீடுகளைக் கொள்ளையடித்துப் பங்கு போட்டு கொள்ளும் கும்பலின் அட்டகாசங்களை, வெறும் வார்த்தையால் வர்ணிக்காமல், ஒரு பள்ளிக்கட்டத்தின் வேலைகள் எவ்வளவு நேர்தியாக இருக்க வேண்டும், எவ்வளவு நேர்மையாக உழைக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக கட்டப்பட்டதுதான் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி.

பிரதமர் துறை வழங்கியுள்ள கணக்குப்படி 33 இலட்சம் வெள்ளிகளில் அரசாங்க அங்கீகாரம் பெற்ற குத்தகையாளர்களால் கட்டப்பட்ட பொட்டலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியையும், காப்பார் வலம்புராசா தமிழ்ப்பள்ளியையும் இந்த மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். நாட்டில் கட்டடங்களை நிர்மாணிப்பதில் நம்மவர்களுக்கு உள்ள திறமையை அரசுக்கும் இந்நாட்டுக்கும், உணர்த்தும் வண்ணம் இப்பள்ளியின் 100 விழுக்காடு வேலைகளையும் நம்மவர்களை கொண்டே முடிக்கப்பட்ட ஒரு பொற்காவியம், மிட்லண்ஸ் தோட்ட தமிழ்ப்பள்ளி!

பள்ளி கட்டுமானத்தை அரசாங்கக் குத்தகையாளர்களால் மட்டுமே செய்ய முடியும் என்ற பாரிசானின் நிலையை மாற்றி, வாய்ப்பு வழங்கப்பட்டால், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கங்களாலும், வாரியத்தாலும் இந்திய குத்தகையாளர்களைக் கொண்டு அருமையான பள்ளிகளைக்  கட்டமுடியும் என்று இந்நாட்டுக்கும், இந்தியச் சமுதாயத்திற்கும் நிரூபித்துக் காட்டி, நம்மவர்களுக்கு புதிய உட்சாகத்தை ஊட்டியுள்ள ஒரு முயற்சியை கொச்சை படுத்துபவனும் ஒரு தமிழ் மகனா?

இந்தப் பள்ளியின் நில உரிமம், கட்டுமானம், மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கம், பொது பணி அமைச்சு, அதற்கான  மந்திரி பதவி, கல்வி அமைச்சு என்று அனைத்தையும் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு வெறும் திண்ணை தூங்கிகளாக 54 ஆண்டுகளைக் கழித்து விட்ட மஇகாவினரும், அதன்  இளைஞர் பகுதியும், இப்பொழுது எங்களுக்கு சவால் விடுவது வேடிக்கையாகவுள்ளது.

கடந்த 1997ஆம் ஆண்டே நான்கு ஏக்கர் நிலம் தமிழ்ப்பள்ளிக்கு ஐ-சிட்டியில் ஒதுக்கப் பட்டது, ஆனால் 2000 ஆம் ஆண்டில் அன்றைய மாண்புமிகு சிவலிங்கத்தின் உதவியுடன் தற்காலிக இடத்தில் நிர்மாணிக்கப் பட்டப் பள்ளியையோ பிறகு 2004ம் ஆண்டில் தற்போதுள்ள இடத்தில் பி.சி.எம் எண்ணும் மேம்பாடு நிறுவனம் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தற்காலிக பள்ளியை நிர்மாணித்த பொழுதோ, இன்று வீண் வாய் வீச்சில் இறங்கியுள்ள இந்த மஇகா இளைஞர்  தலைவருக்கு ஐ-சிட்டியில் நிலையான தமிழ்ப்பள்ளியை கட்டவோ, கேட்கவோ ஏன் வாயில்லை?

எப்பிங்கம் தமிழ்ப்பள்ளியில் நடத்தியதைப் போன்று ஜ-சிட்டி உரிமையாளர்களிடம் பிரோத்தியோக பேரம் பேசிக்கொள்ளலாம் என்று இருந்து விட்டாரோ? கடந்த பதினோரு ஆண்டுகளாக குறைந்தது நில உரிமத்துக்குகூட  கோரிக்கை எழுப்பாத  இவர்களின் கபட நாடகத்திலா இந்திய சமுதாயம் ஏமாந்து விடும்?

ஒரு புரட்சிகரமான புதிய சமூதாயத்தின் தோன்றலின் மையமாக தமிழ்பள்ளிகள் இருக்கட்டுமே என்று, தனது பணத்தில் பொது மண்டபத்தைக் கட்டி, அந்த பணத்தைத் திரும்பப்பெற 10 ஆண்டுகள் வரை காத்திருக்கும்  ஒப்பந்தத்தைப் பள்ளி வாரியத்துடன் செய்து கொண்டவரைத் தூற்றுகின்றீர்கள். அன்றே, உங்கள்தானைய தலைவர் பொதுப்பணி அமைச்சர்,  2008ம் ஆண்டில் இப்பள்ளிக்கு 2.5 மில்லியனை ஒதுக்கீடு செய்தாரே, அந்தபணம் இப்பொழுது யார் பையில் போனது? அதை வாங்கிப் பள்ளியிடம் ஒப்படையுங்கள், மண்டபத்தை மீட்டு விடலாமே!

இந்திய சமுதாயத்தின் மீதும், தமிழ்ப்பள்ளியின் மீதும்  உங்களுக்கு அக்கறை இருந்தால் இப்பள்ளிக்குப் பொதுப்பணித்துறை ஒதுக்கி காணமல் போன அந்த 25 லட்சம் வெள்ளிகளுக்குக் குரல் எழுப்பியிருக்க வேண்டும். இப்பொழுது ஏன் இல்லாதவற்றில் கயிறு திரிக்க வேண்டும்? ஏம்ஸ்சில்  சித்ரகலாவுடன் என்ன கூட்டு, நாட்டுக்கே தெரியும். இந்த 25 இலட்சத்தில் உங்களுக்கு யாருடன் பங்கு? இல்லையென்றால் ஏன் அது குறித்து எல்லாம் வாயை திறப்பதில்லை?

உங்கள் கதைகளை எல்லாம் முன்பே பாட்டிகள்  சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள். ’’தானே திருடன், தன் பொண்டாட்டியை நம்புவான?’’ எப்படி நம்புவான்? அப்படியிருக்க நீங்கள் எப்படி மிட்லண்ட்ஸ் தோட்டப் பள்ளி வாரியத்தையோ எங்களையோ நம்புவீர்கள்?

உங்களின் நம்பிக்கையை, நாணையத்தை, இந்திய சமுதாயமும்  அவ்வளவு சீக்கிரம் மறந்து விடாது.  இந்தியர்களுக்கு  மைக்காவை பற்றிச் சொல்வதா, மைக்காவின் தும்போ  தோட்டத் தொழிலாளர் வீட்டுடமை பற்றி எடுத்துரைப்பதா? ஏம்ஸ் பற்றிச்  சொல்வதா,  எப்பிங்கம் தோட்ட தமிழ்ப்பள்ளி நிலம் பற்றிச் சொல்வதா, புக்கிட் ராஜா தமிழ்ப்பள்ளி நிலம் பற்றிச் சொல்வதா? ஈப்போ ரோடு இந்திய மயானம் பற்றிப் பேசுவதா, சுபாங் இந்திய மயானம் பற்றிப் பேசுவதா? என்ற உங்கள் ம. இ.காவின் நீண்ட அகோரத் தாண்டவத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எதையும் திரைக்குப் பின்னால் செய்வதும் இல்லை, செய்யக்கூடாததை செய்துவிட்டு இச்சமுதாயத்தின் உரிமைகளை எவனிடமும் அடமானம் வைத்து விடுவதுமில்லை. எவன் காலடியிலும் அடிமையாக மண்டியிட்டு கிடக்க போவதுமில்லை. நில விவகாரமோ, பணவிவகாரமோ அத்தனையையும் நேர்மையாக முறையாக மேற்கொண்டே வந்துள்ளோம்.

இந்நாட்டு போலீஸ் படையும், ஊழல் ஒழிப்பு துறையும் உங்கள் பாரிசானின் ஏவல்கள் தானே. தாரளமாக ஏவி விடுங்கள். அப்பொழுதும் நாங்கள் தீயிலிட்ட சீதையைப்போல், புடம் போட்ட தங்கமாக வெளிவருவோம். இச்சமுதாயத்திற்குப் பணி செய்து கிடப்பதே எங்கள் பாணி, யார் வேண்டும் என்று இச்சமுதாயமே முடிவு செய்யும் காலம் வரும் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

.

TAGS: