இன்று பிற்பகல் மணி 2.00 க்கு டாத்தாரான் மெர்தேக்காவில் பெர்சே 3.0 குந்தியிருப்பு போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு செல்லும் மக்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் நகரின் மையத்திற்குச் செல்லும் சாலைகளில் போலீசார் தடுப்புகளை போட்டுள்ளனர்.
அம்பாங் எலிவேட்டட் ஹைவே, ஜாலான் துன் ரசாக், ஜாலான் மகாமெரு, ஜாலான் புடு, ஜாலான் பங்சார் மற்றும் ஜாலான் துன் சம்பந்தன் ஆகியவற்றில் தடுப்புகள் காணப்படுகின்றன.
“பெர்சே 3.0 இன் தேர்தல் சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆணையம் பதவி விலகல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் குந்தியிருப்பு போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கோலாலம்பூர் சாலைகளில் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் ஆறு முக்கிய இடங்களில் கூடுவர். அவை: ஜாலான் சுல்தான், பசார் செனி, மஸ்ஜிட் இந்தியா, மஸ்ஜிட் நெகாரா, பிரிக்பீல்ட்ஸ், கேஎல்சிசி மற்றும் நகரைச் சுற்றியுள்ள இதர இடங்கள்.
ஹிஜாவ் 3.00 ஆதரவாளர்கள் கேஎல்சிசியிலிருந்து ஆஸ்திரேலியா ஹைகமிசனை நோக்கிச் செல்வர். அவர்கள் பெர்சே 3.0 ஆதரவாளர்களுடன் இணந்துகொள்வர்.
ஜாலான் சுல்தானில் காலை மணி 8.00 லிரிந்து மக்கள் கூடத்தொடங்கி விட்டனர்.
இறுதியில், அனைத்து போராட்டவாதிகளும் டாத்தாரான் மெர்தேக்காவை நோக்கி நகர்வர். அவ்விடத்திற்கு மக்கள் செல்வதற்கு கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நீதிமன்ற தடை உத்தரவை பெற்றுள்ளது. மேலும், அவ்விடத்தைச் சுற்றிலும் முள்கம்பிகள் கொண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
போராட்டக்காரர்கள் விரும்புகின்ற இடங்களில் கூடலாம் ஆனால் அவர்கள் பேரணியில் செல்லக்கூடாது என்று நேற்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அறிவித்துள்ளார். அவ்வுத்தரவை மக்கள் புறக்கணிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவை மதிக்கும் என்றும் ஆனால் டாத்தாரான் மெர்தேக்காவுக்கு எவ்வளவு அருகில் செல்ல முடியுமா அதுவரை செல்ல முயலுவோம் என்று பெர்சே 3.0 நேற்று கூறியது.