கிளந்தான் அரசாங்கம்: விவாதத்துக்கு அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை

சுதந்திரப் போராட்ட வீரர் முகமட் இந்ரா பற்றிய சர்ச்சை மீது பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபுவுடன் பொது விவாதம் நடத்த வருமாறு கிளந்தான் பாஸ் அரசாங்கம் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதினை அழைக்கவில்லை. இவ்வாறு பாஸ் கட்சியின் நாளேடான ஹராக்காவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய விவகாரம் மீது விவாதம் நடத்த வருமாறு யாருக்கும் மாநில அரசாங்கம் அதிகாரத்துவ கடிதம் அனுப்பவில்லை என கிளந்தான் ஆட்சி மன்ற உறுப்பினர் முகமட் பாட்லி ஹசான் கூறியதாக அந்த ஏடு குறிப்பிட்டது.

தமது உதவியாளரான பைஹாகி அடிக்குல்லா, கைரிக்கு அனுப்பிய கடிதம், ‘தனிப்பட்ட விசாரணை’ என அவர் சொன்னார்.

மாட் சாபு என்றும் அழைக்கப்படும் முகமட் சாபுவுக்கும் கைரிக்கும் இடையில் விவாதம் ஏதும் நடத்தப்படுமானால் அது குறித்த கருத்தை தெரிவிக்குமாறு அந்தக் கடிதத்தில் பைஹாகி, கைரியை வினவியிருந்தார்.

“பைஹாகி என்னுடைய உதவியாளர், மின் அஞ்சல் வழி கைரியின் கருத்துக்களை அவர் கேட்டிருந்தார்.  அது அதிகாரத்துவ அழைப்பு அல்ல. ”

“இதற்கு முன்னர் பைஹாகி- க்கும் கைரிக்கும் இடையில் தனிப்பட்ட உறவுகள் இருந்தன. அந்த விசாரணை தனிப்பட்ட ஒன்றாகும்,” பாட்லி கூறியதாக ஹாராக்கா குறிப்பிட்டது.

கிளந்தான் மாநில அரசாங்கம் விவாதத்தை நடத்துவதற்கு தயாராக இருக்கிறது. ஆனால் மாட் சாபுவுக்கும் அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசினுக்கும் இடையில் இருக்க வேண்டும் என கிளந்தான் பாஸ் பிரச்சாரப் பிரிவுத் தலைவருமான அவர் சொன்னார்.

“அம்னோவில் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கு ஒரு படியாக பாஸ் துணைத்   தலைவரை கைரி பயன்படுத்திக் கொள்வதை நாங்கள் விரும்பவில்லை.”

“கைரி அம்னோவிலும் அரசாங்கத்திலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.. தமது செல்வாக்கை அதிகரிக்க அவர் இந்த விஷயத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்,” என பாட்லி குறிப்பிட்டார்.

மின் அஞ்சலை கைரி கிளந்தான் மாநில அரசின் அதிகாரத்துவ அழைப்பு என தமது டிவிட்டர் பக்கத்தில் திரித்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.  அதனால் தவறான புரிந்துணர்வு எழுந்தது.

கைரி இளைஞர் தலைவர் என்னும் முறையில் பாஸ் இளைஞர் தலைவருடன் விவாதம் நடத்துவது தான் பொருத்தமாகும் எனக் கூறி விவாதம் நடத்துவதை மாட் சாபு நிராகரித்த பின்னர் கைரி மாட் சாபுவை ‘கோழை’ என்றும் ‘அலி ‘ என்றும் சாடினார்.

இதனிடையே மாட் இந்ரா என அழைக்கப்படும் முகமட் இந்ரா பயங்கரவாதி என முத்திரை குத்திய ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மான் அந்த விவகாரம் மீது கலந்துரையாடலை தொடங்க வேண்டும் என ஜோகூர் பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் காயாட் சவால் விடுத்துள்ளார்.

“நேற்று கனி விடுத்த அறிக்கையை நான் மறுக்கிறேன். அவரது கருத்துக்கள் ஜோகூர் மகன் என்னும் முறையில் எனக்கு மிகவும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. என்னைப் பொறுத்த வரையில் அவருக்கு இன்னும் காலனித்துவ சிந்தனையே உள்ளது.”

ஜோகூர் மூவாரில் அந்தக் கலந்துரையாடலை நடத்தலாம் என கனிக்கு சவால் விடுக்கிறேன் என சுஹாய்சான் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

1950ம் ஆண்டுகளில் மூவார் மாவட்டத்தில் அமைந்துள்ள புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தின் மீது காலனித்துவ ஆட்சியாளர்களை எதிர்க்கும் ஆயுதமேந்திய பிரிவு மாட் இந்ரா தலைமையில் தாக்குதலை நடத்தியது.

TAGS: