ஊழலுக்கும் தேர்தல் ஆணையம், அரசாங்க மோசடிகளுக்கு முடிவு கட்டுமாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த எதிர்த்தரப்புத் தலைவர் தேசியப் பள்ளிவாசலில் மக்களிடையே பேசினார் அப்போது அவருடன் சில அனைத்துலக பார்வையாளர்களும் பிகேஆர் தலைவர் வான் அஜிஸா வான் இஸ்மாயிலும் இருந்தார்கள்.
டத்தாரான் மெர்தேக்காவை நோக்கி கூட்டத்தினருடன் நடந்து சென்ற அவர், தேர்தல் மோசடிகளை முற்றாகக் களையெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகச் சொன்னார்.
“நாம் மக்களுடைய சிந்தனைகளையும் விடுவிக்க வேண்டும். தொடர்ந்து முன்னேற வேண்டும். நாம் டத்தாரான் Penjajah-வாக (காலனித்துவ) மாறி விட்ட டத்தாரான் மெர்தேக்காவையும் விடுவிக்க வேண்டும்,” என்றார் அவர்.
“ஊழலும் மோசடியும் போதும் போதும் என்னும் அளவுக்கு விரிந்து விட்டன. தூய்மையான தேர்தல்களுக்கு நாம் வேண்டுகோள் விடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. மக்கள் விரும்புவதும் அதுவே.”
பிலிப்பீன்ஸையும் இந்தோனிசியாவையும் சேர்ந்த அனைத்துலகப் பார்வையாளர்களை பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு வரவேற்றார். மக்கள் டத்தாரான் மெர்தேக்காவையும் விடுவிக்க வேண்டும் என்றார் அவர்.
சுதந்திரச் சின்னமாக விளங்கும் டத்தாரான் மெர்தேக்காவை பிஎன் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான தருணம் வந்து விட்டது என்றும் மாட் சாபு சொன்னார்.
சுதந்திரமான தேர்தல்களை நாடி ஒன்று திரண்டுள்ள அனைத்து இன மக்களுக்கும் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
“அந்த புனிதமான போராட்டத்துக்கு ஆதரவாக இளைஞர்கள் ஒன்று கூடியிருப்பது எனக்கு ஊக்கத்தைத் தருகிறது,” என்றார் அவர்.