ஜோகூரில் பக்காத்தான் தொகுதி ஒதுக்கீட்டில் தேக்கநிலை

ஜோகூரில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு மீது பிகேஆருக்கும் டிஏபிக்குமிடையில் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுகள் தேக்கநிலையை அடைந்திருப்பதுபோல் தெரிகிறது.

பிகேஆர், தான் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகக் கூறி சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க மறுக்கிறது என்று டிஏபி கூறியது.

“பிகேஆர் அதிகப்படியான தொகுதிகளைக் கோருவதால் பிரச்னை எழுந்துள்ளது”, என ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, ஜோகூரில் உள்ள 26 நாடாளுமன்றத் தொகுதிகளில் தனக்கும் சமப் பங்கு கொடுக்கப்பட  வேண்டும் என்று டிஏபி விரும்புகிறது என்றும் ஆனால் பிகேஆர் அதன் தொகுதிகள் சிலவற்றை விட்டுக்கொடுக்க மறுக்கிறது என்றும் தெரிவித்தார். 

“அது நியாயம் என்றே நினைக்கிறேன்……பிகேஆரிடம் 11 (நாடாளுமன்ற) தொகுதிகள் இருக்கின்றன….ஒன்றிரண்டை டிஏபி-க்குக் கொடுக்கலாம்”, என்றாரவர்.

கடந்த பொதுத்தேர்தலில் ஜோகூரின் 26 நாடாளுமன்றத் தொகுதிகளில் டிஏபி ஆறிலும், பாஸ் எட்டிலும், பிகேஆர் 11 இடங்களிலும் போட்டியிட்டன. ஒரு தொகுதியை பிஎன் போட்டியின்றி வென்றது.

ஜோகூர் பக்காத்தானில் டிஏபி செல்வாக்குமிக்க கட்சியாக உருவாகிவிடும் என்ற பயம்தான் பிகேஆரின் மறுப்புக்குக் காரணம் என்று பூ விளக்கினார்.

“டிஏபி செல்வாக்குமிக்க கட்சியாகி விடும் என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. அது நல்லதல்ல. நாங்கள் வென்றாலும் அது பக்காத்தான் வெற்றிதானே…புதிய பிகேஆர் தலைமை பக்காத்தான் உணர்வுடன் செயல்பட வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.

“பாஸ் சுமார் ஆறு மாநிலத் தொகுதிகளை பிகேஆருக்கும் டிஏபி-க்கும் விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளது.”

2008-இல் மாநில அளவில் 12 இடங்களில் போட்டியிட்ட டிஏபி, அடுத்த தேர்தலில் 15 இடங்களில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற விரும்பும் பக்காத்தான், பிஎன்னின் கோட்டையாக விளங்கும் ஜோகூரில் ஆழமாக ஊடுருவிக் கால்பதிப்பது முக்கியமாகும்.

பிகேஆர்: பூ தடையை மீறிப் பேசுகிறார்

இதன் தொடர்பில் ஜோகூர் பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங்கைத் தொடர்புகொண்டபோது அவர், பூ பக்காத்தானின் கட்டொழுங்கை மீறிவிட்டார் என்று குறைகூறினார்.

“பேச்சுகள் பற்றி மாநில பிகேஆர் அறிக்கை விடுக்கக் கூடாது. அது பரிந்துரைகள் மட்டுமே செய்யலாம். அந்த வகையில் அவர் பக்காத்தானின் ஒழுங்குவிதியை மீறிவிட்டார்”, என்று சுவா குறிப்பிட்டார்.

பேச்சுகள் தேக்கநிலை அடைந்திருப்பதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.

“பேசி முடித்துவிட்டோம். பெரும்பாலான இடங்கள் குறித்து உடன்பாடு காணப்பட்டிருக்கிறது”, என்றாரவர்.

உடன்பாடு காணப்படாதிருக்கும் இடங்கள் குறித்து  பக்காத்தான் தலைமைத்துவம் கலந்துபேசி முடிவெடுக்கும் என்று அந்த முன்னாள் பிஎன் அமைச்சர் கூறினார்.

“ஜோகூர் தொகுதிகள் குறித்த பேச்சுகளை நடத்தி முடிவுகளைத் தலைமைத்துவத்துக்குத் தெரிவித்த விட்டோம்…மாநில அளவில் எல்லாம் முடிந்துவிட்டது. இதை பூ புரிந்துகொள்ள வேண்டும்”, என்று சுவா குறிப்பிட்டார்.

இனி எல்லாவற்றையும் மேலிடம்தான் பேசி முடிவுகாண வேண்டும் என்று கூறிய அவர் மேல்விவரங்கள் தெரிவிக்க மறுத்தார்.

அதன் பின்னர் பூ, டிவிட்டரில் மேலும் இரண்டு பதிவுகளை இட்டிருந்தார். ஒன்றில், “எதையும் அடக்கி வைக்கக்கூடாது, வெடித்து விடும்.அதுதான் என் உணர்வுகளை வெளிப்படுத்தி விட்டேன். இதைப் பெரிது படுத்த வேண்டாம்” , என்று கூறப்பட்டிருந்தது. இன்னொரு பதிவில், “அடிப்படையில்லா, நியாயமற்ற கோரிக்கைகளால் தீர்வுகள் காண்பது இயலாத காரியமாகி விடுகிறது”, என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

TAGS: