கெரக்கான் தலைவர் கோ சூ கூன், கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடக் கூடும் எனக் கூறப்படுகிறது. கெரக்கான் கட்சி வட்டாரங்கள் அதனைத் தெரிவித்தன.
கூட்டரசுப் பிரதேச கெரக்கான் தலைவருமான கோ, பத்து, சிகாம்புட் அல்லது கெப்போங்கில் நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
அந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்பம் கொண்டு ஏற்கனவே வேலைகளை செய்யத் தொடங்கி விட்ட வேட்பாளர்கள், தாங்கள் கீழறுப்புச் செய்யப்படுவதாகக் கருதக் கூடும் என்பதால் கோ வெற்றி பெறும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.
“இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை. கோ மாநிலத் தலைவரும் ஆவார். அவர் போட்டியிட விரும்பினால் அதனை அவரும் மத்திய செயற்குழுவும் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்.”
“பொதுத் தேர்தல் என வரும் போது, வேட்பாளருடைய வெற்றி வாய்ப்புக்களையும் பரிசீலிக்க வேண்டும். கோ வலுவான வேட்பாளர் என மத்திய செயற்குழு கருதினால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது,” என அந்த வட்டாரம் குறிப்பிட்டது.
2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் கெரக்கான் படு தோல்வி அடையும் வரையில் கோ பினாங்கு முதலமைச்சராக இருந்தார்.
“பெரிய நான்கு பிஎன் கட்சி” தலைவர்களில் 2008 தேர்தலுக்குப் பின்னர் கட்சித் தலைமைத்துவத்தை விட்டு விலகாத ஒரே கட்சித் தலைவர் கோ ஆவார்.
அவர் இப்போது கட்சிக்கு உள்ளும் புறமும் (அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா உட்பட) கடும் எதிர்ப்பை எதிர்நோக்கியுள்ளார்.
தலைமைத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுகிறார்
கோ எங்கு போட்டியிட முடிவு செய்தாலும் அவர் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என மொனாஷ் பல்கலைக்கழக அரசியல்-அறிவியல் பேராசிரியர் ஜேம்ஸ் சின் கூறினார்.
“அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது முக்கியப் பிரச்னை அல்ல. அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை அவர் தலைமைத்துவத்தில் தாக்குப் பிடிக்க முடியுமா என்பதுதான் கேள்வி.”
“பதவி துறக்குமாறு கட்சியின் உயர் தலைவர்கள் அவரிடம் நேரடியாகவே சொல்லி விட்டார்கள். இளைய தலைமுறையைச் சேர்ந்த கெரக்கான் உறுப்பினர்கள்-குறிப்பாக பினாங்கில் உள்ளவர்கள்- கோ-வை முற்றாக நிராகரித்து விட்டனர்”, எனக் குறிப்பிட்ட சின், கோ-வை வெளியேற்றுவதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகத் தெரிவித்தார்.
கட்சி விவகாரங்களை கோ புறக்கணிப்பதாக முன்னாள் கெரக்கான் தலைவர் டாக்டர் லிம் கெங் எய்க் வெளிப்படையாகவே கடந்த ஆண்டு குற்றம் சாட்டினார்.
டாக்டர் லிம் பொதுவாக கட்சி விவகாரங்களிலிருந்து ஒதுங்கியிருந்தாலும் அவரும் கோ-வும் பேசிக் கொள்வது கூட இல்லை எனப் பரவலாகக் கருதப்படுகிறது.
1990ம் ஆண்டு தொடக்கம் 2008ம் ஆண்டு வரை பினாங்கு முதலமைச்சராக பணியாற்றியுள்ள கோ, முன்னாள் மஇகா தலைவர் சாமிவேலு, பிபிபி-யின் கேவியஸ் ஆகிய பல பிஎன் உறுப்புக் கட்சிகளின் பெரும்புள்ளிகளைப் போன்று அவரும் 2008 தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
கட்சிக்கு கரடுமுரடான பாதை
அடிநிலை உறுப்பினர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாததால் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பு அது பல இடர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என சின் கருதுகிறார்.
அடுத்த தேர்தலில் பினாங்கை எதிர்த்தரப்பிடமிருந்து மீண்டும் பிஎன் கைப்பற்றுவதற்கான வாய்ப்புக்களுக்கு கோ பாதகமாக இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
கெரக்கான் எதிர்நோக்கும் பெரிய சவால், அது அம்னோவுக்கு அளவுக்கு அதிகமாக விட்டுக் கொடுக்கிறது என்ற எண்ணத்தை போக்குவதாகும்.
“கோ, அம்னோவுக்கு எதிரான நிலையை எப்போதும் எடுத்தது இல்லை. வாக்காளர்கள் அதனை நினைவில் வைத்திருப்பர். அவர் ஏற்கனவே ஒரு முறை நிராகரிக்கப்பட்டு விட்டார். தமது அதிர்ஷ்டத்தைச் சோதிப்பதற்கு அவரிடம் எந்த வலிமையும் இல்லை”, என சின் குறிப்பிடுகிறார்.