டாத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த கம்பி வேலியை உடைக்குமாறு தாமோ அல்லது கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலியோ ஆணையிடவில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியிருக்கிறார்.
என்றாலும் தாம் “அந்த முடிவைத் தற்காக்கப் போவதாக” அவர் சொன்னார். ஏனெனில் தடுப்புக்களை அகற்றுவது ஒரு குற்றமல்ல என்றார் அவர்.
“டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் செல்வது இப்போது பெரிய குற்றமாக கருதப்படுகிறதா? ஆனால் தேர்தலில் மோசடி செய்வது அப்படி அல்ல?” என பிகேஆர் தலைமையகத்தில் நிகழ்ந்த நிருபர்கள் சந்திப்பில் அன்வார் வினவினார்.
“நாம் டாத்தாரான் மெர்தேக்காவில் ஒன்று கூட வேண்டும் என்றுதான் அங்கு வந்த அனைவரும் எண்ணியிருந்தனர். புல் தரை மட்டுமே அங்கு இருந்தது. நாம் அங்கு இருக்க வேண்டும் என அவர்கள் கருதினர்.”
“ஆனால் வலப்பக்கமாக திரும்புமாறு நான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. அதற்காக அவர்களை நான் கண்டிக்க வேண்டுமா? நான் அவர்களை கண்டிக்க வேண்டுமா அல்லது தற்காக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தால் நான் அவர்களைத் தற்காக்கவே செய்வேன்.”
தடுப்புக்கு முன்பு நின்று கொண்டிருந்த அஸ்மினிடம் தமது கையை மடக்கி காட்டும் வீடியோ ஒளிப்பதிவுகள் பற்றிய கேள்விகளுக்கு அன்வார் பதில் அளித்தார்.
ஆனால் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானை ஒட்டி பின்னுக்குச் செல்லுமாறு நான் கூட்டத்தினரிடம் சொன்னதாக அன்வார் குறிப்பிட்டர்.
“நான் உண்மையில் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். தொடர்ந்து செல்லுமாறு அவர்களுக்கு உத்தரவிட நான் யார்? அவர்களுடைய உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் ஆத்திரமாக இருந்தனர். டாத்தாரான் மெர்தேக்காவுக்கு செல்ல வேண்டும் என்ற புனிதமான வாக்குறுதியுடன் அவர்கள் அங்கு வந்தனர்”, என்றார் அவர்.
தடுப்புக்களை மீறுமாறு கூட்டத்தினருக்கு தாமும் அஸ்மினும் உத்தரவிட்டதாக குறை கூறுகின்றவர்களையும் அன்வார் சாடினார்.
தடுப்புக்கள் உடைக்கப்பட்டதும் கலகத் தடுப்புப் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்தனர். இரசாயனம் கலந்த நீரையும் பாய்ச்சினர்.
“அம்னோ அடிவருடிகளிடம் ஆதாரம் ஏதுமில்லை. அதனால் அவர்கள் அதனைச் செய்கின்றனர். நான் சிறையில் இருந்த போது கூட நடந்ததற்கு எல்லாம் அன்வாரே காரணம் என்றனர்.”
போலீசாரும் ஆதரவாளர்களும் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுவது பற்றிக் கருத்துரைக்குமாறும் அன்வாரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர், சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
அன்றைய தினம் நிலவிய குழப்பம் சர்வாதிகார ஆட்சியில் உள்ள நாடுகளில் காணப்படும் சூழ்நிலைகளைப் போல இருந்தது என்றும் அன்வார் சொன்னார்.
“அடால்ப் ஹிட்லர், ஸ்டாலின், முன்பு மியன்மார் சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றை எதிர்ப்பவர்கள் அனைவரும் கிரிமினல்கள், ஒடுக்குகின்றவர்கள் ஆனால் அவர்கள் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள்,” என்றார் அவர்.
முக்கிய ஊடகங்களைக் குறிப்பாக பிஎன் ஆட்சியுடன் தொடர்புடைய ஊடகங்களை சாடிய அன்வார்,” அரசாங்க ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வரும் பொய்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்,” என்றார்.
“சர்வாதிகார ஆட்சிகளின் வழக்கமான நடவடிக்கைகள் இதுதான். ஒன்றுமறியா மக்கள், ஒடுக்கப்பட்டவர்கள் இப்போது கிரிமினல்களாகக் கருதப்படுகின்றனர்.”
“2012ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி நாட்டின் வரலாற்றில் Hari Merdeka Rakyat (மக்கள் சுதந்திர தினம்) ஆக நினைவு கூறப்படும். அவர்களுடைய செய்தியை நசுக்க முடியாது. சுதந்திர நாட்டை இனிமேலும் அடிமைப்படுத்த முடியாது.”
பெர்சே 3.0 பேரணியில் 100,000 பேர் பங்கு கொண்டதாக கோலாலம்பூரில் பல இடங்களில் இருந்த மலேசியாகினி நிருபர்கள் மதிப்பிட்டுள்ளனர்.