இடம் கொடுங்கள்: செய்தித்தாள்களிடம் பெர்சே கோரிக்கை

தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் கூட்டமைப்பான பெர்சே 2.0, மைய நீரோட்ட ஊடகங்களில் தன்னைப் பற்றி எதிர்மறையான செய்திகளே வந்துகொண்டிருப்பதால்  வாராந்திர பத்தியொன்றை எழுதி தன் கருத்துகளையும் எடுத்துரைக்க வாய்ப்பளிக்க வேண்டும் என அச்சு ஊடக ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அம்பிகா ஸ்ரீநிவாசனைத் தலைவராகக் கொண்ட பெர்சே 2.0 இயக்கக்குழு, ஜூலை 9 பெர்சே பேரணி தொடர்பில் ஆங்கில, மலாய்மொழி நாளேடுகளில் வெளிவந்த செய்திகள் மீது சுயேச்சை இதழியல் மையம்(சிஐஜே) மேற்கொண்ட ஆய்வு ஒன்றைச் சுட்டிக்காட்டியிருந்தது.
 
அந்த ஆய்வு, 79.10 விழுக்காட்டு செய்திகள் எதிர்மறையாக அமைந்திருந்ததையும் 20.5 விழுக்காட்டுச் செய்திகளில்தான் பெர்சே 2.0-இன் கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்ததையும் காட்டியது. 8.5 விழுக்காட்டுச் செய்திகள் மட்டுமே அந்தக் கூட்டமைப்பிடமிருந்து நேரடியாக பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.

“பெர்சே 2.0-இன் கோரிக்கைகள் அக்கறைகொண்ட மலேசியர்கள் அத்தனை பேரையும் சென்று அடைந்திருக்க மாட்டா என்பதால் உங்கள் நாளேடுகளில் வாராந்திர பத்தி எழுதும் வாய்ப்பை வழங்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்”, என்று அந்த அறிக்கை கூறிற்று.

ஆகஸ்ட் 15-இல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நடப்பு ஊடகத் தணிக்கைமுறை காலத்துக்கு ஒவ்வாதது என்று கூறியதைப் பாராட்டிய பெர்சே 2.0, ஊடகங்கள் சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற தன் போராட்டத்தில் சேர்ந்துகொள்ளுமாறு எல்லாச் செய்தித்தாள்களுக்கும் அழைப்பு விடுத்தது.

பெர்சே 2.0 தொடர்பான விவகாரங்கள் பற்றியும் அதன் கோரிக்கைகள் பற்றியும் நியாயமான விளக்கங்களை எழுதும் ஆற்றல் பெற்ற எழுத்தாளர்கள் பெர்சே 2.0-இல் உண்டு.

“தேர்தல் சீரமைப்பு தொடர்பில் எங்கள் கருத்துகளை எடுத்துச்சொல்ல ஒரு பத்தியை ஒதுக்கித்தர வேண்டும் என்ற எங்கள் வேண்டுகோளை தயை கூர்ந்து பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”, என்றந்த அறிக்கை கூறியது.

பெர்சே 2.0 இயக்கக்குழுவில் அம்பிகா, எண்ட்ரூ கூ, அருள் பிரகாஷ், கே.ஆறுமுகம், பாருக் மூசா, லியாவ் கொக் பா, மரியா சின் அப்துல்லா, ரிச்சர்ட் இயோ, சுப்ரமணியம் பிள்ளை, தோ கின் வூ, வொங் சின் குவாட், இயோ யாங் போ, சைட் கமருடின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

TAGS: