இந்த நாட்டில் காணப்படுகிற பல்வேறு மனித உரிமைப் பிரச்னைகளை ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என சுஹாக்காம் என்னும் மலேசிய மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த ஆணையத்தின் 12வது ஆண்டு நிறைவை ஒட்டி விடுத்துள்ள செய்தியில் அதன் தலைவர் ஹாஸ்மி அகாம் அவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் நடத்தும் முதல் கூட்டத்தில், சுஹாக்காம் இது நாள் வரை மொத்தம் 11 ஆண்டறிக்கைகளை சமர்பித்துள்ளது என்றும் ஆனால் அவை அவையில் விவாதிக்கப்பட்டதே இல்லை என்றும் அவர் சொன்னார்.
“கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு ஆய்வுகள், கலந்துரையாடல்கள், வட்டமேசை விவாதங்கள், பொது விசாரணைகள் வழி தயாரிக்கப்பட்ட ஆண்டறிக்கைகள் மூலம் எங்கள் பரிந்துரைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. “
ஆனால் இது நாள் வரையில் அந்த 11 ஆண்டறிக்கைகளில் எதுவும் விவாதிக்கப்பட்டதில்லை. நாடாளுமன்ற விவாதங்களில் உறுப்பினர்கள் மனித உரிமைப் பிரச்னைகளையும் நாங்கள் வழங்கிய பரிந்துரைகளையும் பற்றி விவாதிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு செய்வதின் மூலம் இந்த நாட்டில் மனித உரிமை நிலவரம் குறித்து பொது மக்கள் நன்கு அறிந்து கொள்ள முடியும்,” என்றார் ஹாஸ்மி அகாம்.
கடந்த பல ஆண்டுகளில் சுஹாக்காம் ஆய்வு செய்துள்ள பல பிரச்னைகளில், விசாரணையின்றி தடுத்து வைப்பதற்கு வகை செய்யும் சட்டங்களும் அடங்கும் என அவர் சொன்னார்.
அந்தச் சட்டங்கள் “மனித உரிமைகள் மீதான அனைத்துலகப் பிரகடனத்தின் 9,10,11வது பிரிவுகளுக்கு முரண்பாடாக உள்ளன. எனவே அந்தச் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட வேண்டும் என சுஹாக்காம் வலியுறுத்துகிறது.
“அமைதியான பேரணிகளில் பங்கு கொள்வதற்கு மக்களுக்கு உரிமை இருப்பதாக சுஹாக்காம் மீண்டும் வலியுறுத்துகிறது,” என ஹாஸ்மி குறிப்பிட்டார்.
பெர்சே 2.0 பிரச்னைகள் மீது விசாரணை
கோலாலம்பூரில் பெர்சே 2.0 பேரணியின் போதும் அதற்கு முன்னரும் அதிகாரிகள் மித மிஞ்சிய பலத்தைப் பயன்படுத்தினர் என்று கூறப்படுவது மீது பொது விசாரணை ஒன்றை நடத்தவும் சுஹாக்காம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார். மனித உரிமை அத்துமீறல்கள் நிகழ்ந்துள்ளதா என்பதைக் கண்டறிவது அந்த விசாரணையின் நோக்கமாகும்.
விசாரணையை நடத்தும் குழுவுக்கு ஆணையத் துணைத் தலைவர் காவ் லேக் தீ தலைமை தாங்குவார். அவருக்கு ஆணையர்களான மாஹ்முட் ஸுஹ்டி அப்துல் மஜிட்டும், டெட்டா சாமெனும் உறுதுணையாக இருப்பார்கள்.