முன் கூட்டியே வாக்களிக்கும் முறை பிஎன் வெற்றிக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும் என பிகேஆர் கூறுகிறது

முன் கூட்டியே வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்வதை பெர்சே அமைப்பும் எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ள போதிலும் அதன் அமலாக்கத்திற்கு தெளிவான நடைமுறைகள் இல்லாததால் அது வாக்கு மோசடிகளுக்கு வழி வகுத்து பிஎன்-னுக்குச் சாதகமாக அமையக் கூடும் என பிகேஆர் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

தேர்தல் முகவர்களை பயிற்றுவிப்பதில் தனித்துவம் பெற்றுள்ள பிகேஆர் துணைத் தலைமைச் செயலாளர் ஸ்டீவன் சூங் அவ்வாறு எச்சரித்துள்ளார்.

1981ம் ஆண்டுக்கான தேர்தல் (தேர்தலை நடத்துவது) விதிமுறைகளுக்கு இவ்வாண்டு பிப்ரவரி மாதமும் ஏப்ரல் மாதமும் கொண்டு வரப்பட்ட இரண்டு திருத்தங்கள்- முன் கூட்டியே வாக்களிக்கும் நடைமுறையின் நேர்மையை உறுதி செய்யத் தவறி விட்டதாக அவர் சொன்னார்.

முன் கூட்டியே வாக்களிப்பதற்கான நடைமுறைகள் அந்தத் திருத்தங்களில் விவரமாக கூறப்படவில்லை என்பதும் வாக்குச் சீட்டுக்கள் கொடுக்கப்படுவதற்கு முன்னர் முன் கூட்டியே வாக்களிக்கின்றவர்கள் அழியா மையை அவசியம் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடப்படாததும் அதில் காணப்படும் தெளிவான பலவீனங்கள் என்றார் சூங்.

“முன் கூட்டியே வாக்களிக்கின்றவர்களுக்கு அழியா மை பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியுள்ளது. ஆனால் முதல் திருத்தம் வழக்கமான வாக்களார்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளது.”

“இரண்டாவது திருத்தம் முன் கூட்டியே வாக்களிப்பது சம்பந்தப்பட்டதாகும். ஆனால் அதில் வாக்களிப்பு நடைமுறைகள் மீது ஒரு வார்த்தை கூடக் கிடையாது.”

‘அதனால் அழியா மை முன் கூட்டியே வாக்களிக்கின்றவர்களுக்கு பயன்படுத்தப்படுவது மீது நிச்சயமற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஆள் மாறாட்டம் செய்வதின் மூலம் “முன் கூட்டியே வாக்காளர்கள் 100 விழுக்காடு” வாக்களித்து விட்டதாக சொல்ல முடியும்,” என அவர் விடுத்த அறிக்கை தெரிவித்தது.

அடுத்த பொதுத் தேர்தலில் முன் கூட்டியே வாக்களிக்கும் முறை பெரும் சர்ச்சைக்கு இலக்காகியுள்ள அஞ்சல் வாக்குகளுக்குப் பதில் அறிமுகம் செய்யப்படும். என்றாலும் அஞ்சல் வாக்கு உரிமை முன் கூட்டியே வாக்களிக்க முடியாத சிறிய எண்ணிக்கையிலான போலீஸ், இராணுவ அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும்.

 

TAGS: