பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மான்சோருக்கு UPSI என்ற Universiti Pendidikan Sultan Idris குழந்தைப் பருவக் கல்விக்காக கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளது.
பெர்மாத்தா வழியாக குழந்தைப் பருவக் கல்விக்கு ரோஸ்மா ஆற்றி வரும் பங்கை அங்கீகரிக்கும் வகையில் அந்த கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அந்தப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராக் இளவரசியுமான துவாங்கு ஸாரா சலிம் அந்த விருதை ரோஸ்மாவுக்கு வழங்கினார்.
பெர்மாத்தா வழியாக தாம் செய்து வருகின்ற சமூகப் பணி இப்போது பதின்ம வயத்தினருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என அந்த விருதை ஏற்றுக் கொண்டு நிகழ்த்திய உரையில் ரோஸ்மா குறிப்பிட்டார்.
தமது பணி மென்மேலும் தொடருவதற்குத் தூண்டுகோலாகவும் அந்த விருது திகழும் என்றும் அவர் சொன்னார்.
“பெர்மாத்தா திட்டங்களை உருவாக்கி அமலாக்கி வருகின்ற அனைவருக்கும், கற்பிக்கின்றவர்களும் பெர்மாத்தாவின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு நான் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்.”
“எனக்கு ஆதரவு அளித்து வரும் பாசமுள்ள என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். நான் இந்த விருதை மறக்க மாட்டேன். இறுதி வரை இது என் இதயத்தில் நிலைத்திருக்கும்,” என்றார் ரோஸ்மா.
தஞ்சோங் மாலில் உள்ள Universiti Pendidikan Sultan Idrisல் (சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம்) அந்த விருதளிப்புச் சடங்கு இன்று பிற்பகல் நடைபெற்றது.
அந்த நிகழ்வு துவாங்கு ஸாரா UPSI வேந்தராக நியமிக்கப்பட்டதையும் குறித்தது. அவரது நியமனம் இவ்வாண்டு தொடக்கத்திருந்து அமலுக்கு வந்தது.
நாடு முழுவதும் இப்போது 624 பெர்மாத்தா மய்யங்கள் இயங்குவதாகவும் ரோஸ்மா தமது உரையில் தெரிவித்தார்.