போலீஸ் வன்முறை எனத் தமது புதல்வி கூறுவதை டாக்டர் மகாதீர் மறுக்கிறார்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், பெர்சே 3.0 பங்கேற்பாளர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக தமது புதல்வி மரினா தி ஸ்டார் நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் கூறியிருப்பதை மறுத்து அந்த நாளேட்டுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

போலீசார் அளவுக்கு அதிகமாக வன்முறையைப் பயன்படுத்தியதற்கு உத்தரவு காரணமாக இருக்கலாம் என்று அந்தக் கட்டுரையில் தமது புதல்வி குறிப்பிட்டிருந்ததை மகாதீர் வன்மையாக மறுத்துள்ளதாக அந்த ஆங்கில் மொழி நாளேட்டில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

“காயமடைந்த பலரை போலீசார் அடிக்கவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட அங்கு நிகழ்வதைக் கண்காணிப்பதாக அல்லது பதிவு செய்வதாக தாங்கள் எண்ணிய யாரையும் தாக்கியுள்ளனர்.”

“அத்துடன் அங்கு சிவப்பு நிறச் சட்டைக்காரர்களும் இருந்தனர். அவர்கள் பாஸ் கட்சியைச் சேர்ந்த பயிற்சி பெற்ற குண்டர்கள். பலத்தைப் பயன்படுத்துவதே அவர்களுடைய வேலையாகும்,” என்றார் அவர்.

நேற்று மரினா தமது முஸிங்ஸ் பகுதியில் இவ்வாறு எழுதியுள்ளார்: போலீஸ் வன்முறைக்கு யாரும் ஆணையிடவில்லை என நமது உள்துறை அமைச்சர் வலியுறுத்தினால் போலீசார் அவ்வாறு நடந்து கொள்வதற்கு அதுவும் இவ்வளவு மித மிஞ்சி செயல்படுவதற்கு என்ன காரணம் ?

“மருத்துவமனையில் காயங்களுக்காக 65 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மட்டுமே போலீஸ்காரர்கள். உண்மையில் அந்த விவரம் ஏதோ ஒரு தகவலைச் சொல்கிறது.”

பெர்சே 3.0ல் கலந்து கொண்ட தமது புதல்வி மரினா காயமடையாததற்கும் மகாதீர் ஒர் விளக்கத்தை அளித்தார்.

“காரணம் அவர் அதிகாரிகள் ஏற்படுத்தியிருந்த தடைகளை மீற முயலவில்லை. அவர் அந்தத் தடைகளை அடைந்ததும் அமர்ந்து விட்டார். அவரது எடுத்துக்காட்டை எல்லா ஆர்ப்பாட்டக்காரர்களும் பின்பற்றியிருந்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டிருக்காது.”

போலீசார் பலத்தைப் பயன்படுத்தியதை நியாயப்படுத்திய மகாதீர், மற்ற இடங்களில் தடைகள் உடைக்கப்பட்டதையும் போலீஸ் கார்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டு கவிழ்க்கப்பட்டதையும் மரினா அறிந்திருக்க வேண்டும்,” என்றார்

தடுப்புக்களுக்குப் பதில் கலகத் தடுப்புப் போலீசார் 

மரினா எழுதியுள்ள கட்டுரையின் தலைப்பு “சுயேச்சை ஆணைக் குழுவே சிறந்த வழி” என்பதாகும்.

வன்முறை வெடிப்பதற்கு முன்னர் வழக்குரைஞர் மன்றக் கட்டிடத்துக்கு அருகில் லெபோ பாசாரில் தமது அனுபவங்களையும் மரினா அதில் விவரித்துள்ளார்.

அந்தத் தடைகளுக்கு பின்னால் இருந்த போலீஸ் அணியும் திடீரென வெளிப்படையாக மீட்டுக் கொள்ளப்பட்டு அதற்குப் பதில் எப்ஆர்யூ என்னும் கலகத் தடுப்புப் போலீசார் நிறுத்தப்படும் வரையில்  சூழ்நிலை மிகவும் அமைதியாகவும் கோலாகலமாகவும் இருந்ததாக அவர் சொன்னார்.

“நான் அது குறித்து இது நாள் வரை சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். காரணம் ஏதுமில்லாமல் சாந்தமாக இருந்த போலீசார் காரணம் ஏதுமில்லாமல் ஏன் பகைமைப் போக்கிற்கு மாறினர் ?”

ஏப்ரல் 28ம் தேதி நியாயமான சுதந்திரமான தேர்தல்களைக் கோரி 100,000 பேர் கோலாலம்பூர் சாலைகளில் பெர்சே தலைமையில் ஒன்று திரண்டனர்.

அவர்கள் கம்பி வேலிகளால் மூடப்பட்டிருந்த டாத்தாரான் மெர்தேக்காவை சுற்றிலும் ஒன்று கூடினர்.

அங்கு அவர்கள் பல மணி நேரம் தங்கியிருந்த பின்னர் பிற்பகல் மணி 3.00 வாக்கில் கலைந்து செல்லுமாறு அவர்களுக்கு ஆணையிடப்பட்டது.

கலைந்து செல்லுமாறு பெர்சே உத்தரவிட்ட உடனடியாக அந்தக் கம்பி வேலிகள் மீறப்பட்டன. அதனைத் தொடர்ந்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் இரசாயனம் கலந்த நீரும் தொடர்ந்து பாய்ச்சப்பட்டன.

போலீஸ்காரர்கள் தங்களை அடித்து துன்புறுத்தியதாக பல ஆர்ப்பாட்டக்காரர்களும் பத்திரிக்கையாளர்களும் கூறிக் கொண்டுள்ளனர்.

 

TAGS: