வணிகர்கள் அம்பிகா வீட்டுக்கு முன்பு ‘கடை’ போட்டனர்

Ikhlas என்ற சிறு வணிகர்கள் அமைப்பு பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு வெளியில் இன்று காலை பேர்கர் கடை போட்டது.

இரண்டு சனிக் கிழமைகளுக்கு முன்பு பெர்சே பேரணி நடந்த போது தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு அது அங்கு கடை அமைத்தது.

“நாங்கள் கோலாலம்பூரில் வர்த்தகம் செய்ய முடியாவிட்டால் நாங்கள் இங்கு வியாபாரம் செய்வோம்,” என Ikhlas தலைவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லா கூறினார்.

என்றாலும் அந்த நடவடிக்கை வெறும் அடையாள நடவடிக்கையே. காரணம் ஆடம்பர வீடுகள் நிறைந்துள்ள புக்கிட் டமன்சாரா பகுதியில் அந்தக் கடைக்கு போதுமான வாடிக்கையாளர்கள் வரவில்லை.

அந்தக் கடையில் தயாரிக்கப்பட்ட பேர்கர்கள் அனைத்தும் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என அந்தக் கடையை நடத்தியவர்கள் கூறினார். மொத்தம் 200 பேர்கர்கள் தயாரிக்கப்பட்டன.

இலவச பேர்கர்கள் பற்றி வினவப்பட்ட போது “இது ஒரு தந்திரமே” என அவர்களில் ஒருவர் கூறினர்.

Ikhlas கடந்த சனிக்கிழமையன்று முதலாவது ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் 30 வியாபாரிகள் கலந்து கொண்டனர். பெர்சே 3.0 பேரணி காரணமாக தங்களுக்கு மொத்தம் 200,000 ரிங்கிட்டுக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.

அம்பிகா சைவ உணவை மட்டுமே உட்கொள்கின்றவர் என அந்த பெர்சே தலைவரின் நெருங்கிய தோழியும் மகளிர் உரிமை போராளியுமான ஐவி ஜோஷியா டிவிட்டர் பதிவு ஒன்றில் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.