இசி தலைவர் இன்னும் அம்னோ உறுப்பினர்தான், பிகேஆர்

சட்ட அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் இசி (தேர்தல் ஆணையம்) தலைவர் அப்துல் அசிஸ் யுசுப் அம்னோ உறுப்பினராக இல்லை ஏனென்றால் ஆண்டு சந்தாவைக் கட்டாததால் அவருடைய உறுப்பினர் தகுதி காலாவதியாகி விட்டது என்று நேற்று கூறினார். அவ்விளக்கத்தை இன்று பிகேஆர் நிராகரித்து விட்டது.

“அம்னோ இளைஞர் பிரிவின் தலைமைச் செயலாளராக இருந்த என் அனுபவ அடிப்படையில் கூறுகிறேன். அம்னோ உறுப்பினராக பதிவு செய்துகொள்ளும் ஒருவர் இரு கட்டணங்களைக் கட்ட வேண்டும். ஒன்று, உறுப்பினருக்கான கட்டணம். அதை ஒரு முறை மட்டுமே கட்ட வேண்டும்.

“மற்றொன்று ஆண்டு சந்தா. ஆண்டு சந்தா கட்டுவது ஒருவரை அம்னோவின் ஆண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்கிறது”, என்று பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியன் கூறினார்.

அப்துல் அசிஸ் ஆண்டு சந்தாவைக் கட்டவில்லை என்றாலும், அது அவர் அம்னோ உறுப்பினராக இருப்பதைத் தடுக்கவில்லை, அவர் அந்த மலாய் கட்சியின் ஆண்டுக் கூட்டங்களில் பங்கேற்க முடியாது என்று அவர் வாதிட்டார்.

“அது அவரது உறுப்பியத்தை நிராகரிக்கவில்லை. அவ்வளவுதான்.”

அம்னோ உறுப்பினர் ஒருவர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் அல்லது அவர் தமது பெயரை கட்சி உறுப்பினர் பட்டியலிலிருந்து நீக்கிவிடுமாறு எழுதிக் கேட்டுக்கொண்டால் மட்டுமே அவர் கட்சி உறுப்பினர் இல்லை என்று கருத்தப்படும் என்று சைபுடின் விளக்கம் அளித்தார்.

நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நஸ்ரி இசி தலைவர் அப்துல் அசிஸ் அம்னோ உறுப்பினராக இல்லை ஏனென்றால் ஆண்டு சந்தாவைக் கட்டாததால் அவரது உறுப்பியம் காலாவதியாகி விட்டது என்று கூறினார்.

 

 

TAGS: