பிரதமர்: பெர்சே ஊடக விளம்பரத்துக்காக அரங்கத்தை நிராகரித்தது

அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் பெயர் குறிப்பிடாமல் தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 3.0ஐ சாடியிருக்கிறார்.

பெர்சே 3.0 பங்கேற்பாளர்கள் டாத்தாரான் மெர்தேகாவில் போடப்பட்டிருந்த தடைகளை தாக்கி அதன் விளைவாக அனைத்துலக ஊடகங்களில் விளம்பரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக பெர்சே 3.0 ஏற்பாட்டாளர்கள் மாற்று இடங்கள் வழங்கப்பட்டதை ஏற்க மறுத்து விட்டதாக அவர் சொன்னார்.

“அவர்கள் தடைகளைத் தகர்க்க வேண்டும் என விரும்புவதால் மெர்தேக்கா அரங்கத்தை நிராகரித்து விட்டதாக என்னிடம் கூறப்பட்டது. அவர்கள் சண்டை போட விரும்பினர். அவர்கள் போலீஸ்காரர்களை உதைக்க விரும்பினர்.”

“குழப்பம் ஏதும் இல்லை என்றால் அவர்களைப் பற்றிய செய்தி சிஎன்என், பிபிசி, அல் ஜாஸிரா ஆகியவற்றில் வர மாட்டா.”

“அது தான் அவர்களுடைய உண்மையான நோக்கம். அரசாங்கம், அதிகாரிகள் என்னும் முறையில் நம்மை கொடூரமானவர்கள் என உலகிற்குக் காட்ட அவர்கள் விரும்பினர்,” என அவர் நேற்று அம்னோ 66 வது ஆண்டு நிறைவை ஒட்டி புக்கிட் ஜலில் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அந்தக் கூட்டத்தில் 100,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

“அவை நாகரிகமான மக்களுடைய நடவடிக்கைகளா ? நாட்டின் தோற்றத்தைப் பாதுகாக்க விரும்பின்றவர்களுடைய நடவடிக்கைகளா ?” என அவர் வினவினார். பெர்சே ஆதரவாளர்களும் ஏற்பாட்டாளர்களும் சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்கவில்லை. மலேசியாவின் நல்ல தோற்றத்தையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றும் நஜிப் சாடினார்.

“புக்கிட் ஜலில் அரங்கில் கூடியுள்ள மக்கள் விரும்பினால் அவர்களும் டத்தாரான் மெர்தேக்காவை பிடித்திருக்கலாம். ஆனால் சட்டத்தைப் பின்பற்றும் குடி மக்கள் என்னும் முறையில் அவர்கள் அந்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை.”

“ஏனெனில் இந்த நாட்டை அம்னோ விடுவித்தது, அம்னோ மேம்படுத்தியது, அம்னோ காரணமாகவே இந்த நாடு வளர்ச்சி அடைந்தது. வெற்றி அடைந்த நாடாகத் திகழ்கிறது,” என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

“அதனால் தான் நமது நாட்டுக்கு ஏதாவது நிகழும் போது எங்கள் உள்ளம் உடைந்து விடுகிறது. அவர்கள் என்ன செய்தாலும் அம்னோ இந்த நாட்டின் கௌரவத்தையும் தோற்றத்தையும் பாதுகாக்கும்.”

நஜிப் உரையாற்றிய போது நாடு முழுவதிலிருந்தும் வந்துள்ள சிவப்புச் சட்டை அணிந்துள்ள அம்னோ ஆதரவாளர்கள் அவ்வப்போது கை தட்டி ஆரவாரம் செய்தனர். பலர் தென்னாப்பிரிக்காவில் உலகக் கிண்ண ஆட்டங்கள் நடைபெற்ற போது பயன்படுத்தப்பட்ட ‘vuvuzela’ ஊதுகுழல்களை ஊதினர்.