பாஸ்: டிஏபி மலாய் சமூகத்துக்கு மருட்டல் அல்ல

மலாய் அரசியல் நிலைக்கு டிஏபி மருட்டலாக இல்லை. ஏனெனில் அது பெரும்பான்மையான நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்லவே முடியாது. இவ்வாறு பாஸ் கட்சி கூறுகிறது.

“நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 222 இடங்களில் 48ல் மட்டுமே போட்டியிடும் டிஏபி எப்படி மலாய் பிரதிநிதித்துவத்துக்கு மருட்டலாக விளங்க முடியும் ?” என ஷா அலாம் பாஸ் எம்பி காலித் சமாட் கேள்வி எழுப்பினார். அவர் நேற்று ஷா அலாமில் 100 பேர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் பேசினார்.

டிஏபி பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு அவற்றில் வெற்றி பெற முடிந்தால் மட்டுமே அது கவலைக்குரிய விஷயமாகும் என்றார் அவர்.

பெரும்பான்மை இடங்கள் மலாய் சமூகத்தின் கரங்களில் இருப்பதையும் காலித் சுட்டிக் காட்டினார். கிட்டத்தட்ட 137 இடங்கள் அவ்வாறு இருப்பதாக அவர் மதிப்பிட்டார்.

அந்தத் தொகுதிகளில் அம்னோ, பாஸ் அல்லது பிகேஆர்-ஐ சேர்ந்த மலாய் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட முடியும். ஆகவே எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் மலாய் சமூகத்தின் பிரதிநிதித்துவம் நிலைத்திருக்கும் என்றும் காலித் குறிப்பிட்டார்.

“Wacana Islam Melayu DAP” ( டிஏபி மலாய்-முஸ்லிம் விவாதம்) என்னும் தலைப்பில் ஷா அலாமில் உள்ள மாநிலச் செயலகக் கட்டிடத்தில் நடைபெற்றது.

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் அரசியல் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரி, மலேசிய அனைத்துலக இஸ்லாமியைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மாஸ்லி மாலிக், ஜனநாயக, பொருளாதார விவகாரங்களுக்கான சிந்தனைக் களஞ்சியத்தைச் சார்ந்த வான் சைபுல் வான் ஜேன் ஆகியோரும் அந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.

நிழல் அமைச்சரவை கொள்கைகளை திசை திருப்புவதாக அமைந்து விடும்

அந்த விவாதத்தில் கலந்து கொண்ட பேராளர் ஒருவர் எழுப்பிய ஒரு கேள்விக்குப் பதில் அளித்த காலித், எதிர்த்தரப்புக் கூட்டணி ஏன் நிழல் அமைச்சரவையை அமைக்கவில்லை என்பதையும் விளக்கினார்.

அமைச்சுக்களுக்குத் தலைமை தாங்குகின்றவர்களை நியமிப்பதைக் காட்டிலும் தான் அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் அமலாக்கும் கொள்கைகளே மிகவும் முக்கியமானவை என பக்காத்தான் ராக்யாட் கருதியதாக அவர் சொன்னார்.

“நாங்கள் நிழல் அமைச்சர்களுக்கான பெயர்களை முன்மொழிந்தால் மற்றவர்கள் பிரச்னைகளை எழுப்புவார்கள்.”

“அப்போது விவாதம் அல்லது சர்ச்சை கொள்கைகள் மீது நடக்காமல் தனிநபரைப் பற்றியதாக இருக்கும்,” என காலித் மேலும் சொன்னார்.

அரசியல் ஆதாயம் பெறுவதற்காக மற்ற கட்சிகளும் நியமனங்களைச் செய்யக் கூடும் என்பதை ஜைரிலும் ஒப்புக் கொண்டார்.

“நாளை டோனி புவாவை கல்வி அமைச்சராக நாங்கள் அறிவித்தால் நமது பிள்ளைகளை இந்த  ‘Cina ah beng’ கட்டுப்படுத்த முயலுவதாக சிலர் சொல்லக் கூடும்,” என அவர் புன்னகையுடன் கூறினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

ஆனால் அந்தக் கருத்தை டாக்டர் மாஸ்லி ஒப்புக் கொள்ளவில்லை. பக்காத்தான் நிழல் அமைச்சரவையை அமைக்க வேண்டும் என தாம் பிடிவாதமாகப் பிரச்சாரம் செய்யப் போவதாக அவர் சொன்னார்.

“கூட்டரசில் எதிர்க்கட்சியாக பாரிசான் நேசனல் திகழும் போதும் அது நிழல் அமைச்சரவையை அறிவிக்க வேண்டும் எனவும் நான் பிரச்சாரம் செய்வேன்,” என அவர் சொன்ன போதும் கூட்டத்தினர் ஆரவாரம் செய்தார்கள்.