‘பாஸ் பக்காத்தான் அல்லாத கட்சிகளுடன் ஹுடுட் சட்டத்தை அமலாக்க முடியும்’

ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதற்கு உதவியாக கூட்டரசு அரசமைப்பைத் திருத்துவதற்கு பாஸ் கட்சி முன்னுரிமை அளிக்கும். அதற்கு தனது பக்காத்தான் பங்காளிக் கட்சிகளை மாற்றுவது தான் வழி என்றால் அது அவ்வாறு செய்யும். இவ்வாறு பாஸ் உலாமாப் பிரிவுத் தலைவர் ஹருண் தாயிப் கூறுவதாக இன்று நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் இன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்று கூறுகிறது.

“பக்காத்தானில் இப்போது உள்ள பங்காளிகளுடன் இல்லாவிட்டாலும் கூட நாங்கள் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவோம். அரசமைப்பைத் திருத்துவோம். எங்களுக்குத் தங்கள் ஆதரவை வழங்கும் மற்ற கூட்டணிகளும் இருக்கலாம்,” என அவர் சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டது.

ஆனால் அவர் அந்த பக்காத்தான் அல்லாத அரசியல் கட்சிகளையும் அப்படி எதுவும் இருந்தால் ஹுடுட் சட்டத்துக்கு ஆதரவான கட்சிகளையும் பெயர் குறிப்பிடவில்லை.

இஸ்லாத்துக்காகப் போராடும் கட்சி என்ற முறையில் பாஸ் கட்சி அந்த சமயம் கோருகின்ற விஷயங்களைச் செய்ய வேண்டும் என்றும் ஹருண் தாயிப் சொன்னார்.

பாஸ் கட்சி தனது பக்காத்தான் ராக்யாட் பங்காளிக் கட்சிகளைக் காட்டிலும் கூடுதலான இடங்களை வென்றால் ஹுடுட் சட்ட அமலாக்கத்தை தவிர்க்க முடியாது என்றும் அவர் சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டுள்ளது.

“ஹுடுட் அமலாக்கம், கூட்டரசு அரசமைப்பைத் திருத்துவது ஆகியவை பற்றிய (பாஸ் தலைவர்) ஹாடியின் அறிக்கை, கட்சித் தலைவர் என்ற முறையில் பொதுத் தேர்தலில் எதிர்த்தரப்புக் கூட்டணி வெற்றி பெற்றால் பாஸ் கட்சியின் எண்ணங்களை எப்படி இருக்கும் என்பதைப் பிரதிபலித்தன.”

கூட்டரசு அரசமைப்பில் ஹுடுட் சட்டத்தை ஒரு வாழ்க்கை முறையாக இணைத்துக் கொள்ள பாஸ் எண்ணம் கொண்டுள்ளது என ஹாடி அவாங் சொன்னதாக கூறப்படுவதை டிஏபி தலைவர் கர்பால் சிங் கண்டித்தது மீது ஹருண் கருத்துரைத்தார்.

“அது அரசமைப்புக்கு எதிரானதா அல்லது கர்பாலின் தனிப்பட்ட கருத்தா,” என அவர் வினவினார்.

ஆனால் அந்த அறிக்கையை விடுத்ததை ஹாடி மறுத்துள்ளார்.