டிஏபி-யும் ஹனீப் தலைமையிலான குழுவைப் புறக்கணிக்கும்

 ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியில் நிகழ்ந்த வன்முறைகளை விசசரிக்க  முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஹனீப் ஒமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அறுவர் கொண்ட சுயேச்சைக் குழுவை டிஏபி புறக்கணிக்கும்.

“அந்த சுயேச்சைக் குழுவை- பெர்சே 3.0 கம்யூனிஸ்ட்களுடன் தொடர்புடையது, அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சி என வெளிப்படையாக அதனைக் கண்டித்ததின் மூலம் ஹனீப் ஒமார் தமது பாகுபாடு காட்டாத நிலையை விட்டுக் கொடுத்து விட்டதால்- முற்றாக புறக்கணிப்பதாக டிஏபி அறிவித்துக் கொள்கிறது.”

இவ்வாறு டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவைப் புறக்கணிக்கப் போவதாக நேற்று வழக்குரைஞர் மன்றம் அறிவித்தது. அதே போன்று அந்தக் குழு விசாரணையில் பங்கேற்கப் போவதில்லை என பெர்சே தலைவர்களும் கூறி விட்டனர்.

“போலீஸ் வன்முறையில் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பதாலும் பெர்சேயை அவர் வெளிப்படையாக கண்டித்துள்ள அவர் பேரணிக்கு எதிராக பாகுபாடு காட்டக் கூடியவர் என்பதை உணர்த்து விட்டதாலும் விசாரணைக் குழுவில் இடம் பெறுவதற்கு ஹனீப் தகுதி இல்லாதவர்.”

“பெர்சேயுடன் கம்யூனிசத்தை இணைத்ததின் வழி ஹனீப் ஏற்கனவே முடிந்து விட்ட கடந்த காலப் போர்களை ஹனீப் இன்னும் நடத்திக் கொண்டிருக்கிறார். அத்துடன் விசாரணை முடிவுகள் எப்படி இருக்கும் என்பதையும் உணர்த்தி விட்டார்,” என்றார் லிம்.