13வது பொதுத் தேர்தலுக்கு ஆயிரம் பிஎன் வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஆளும் பிஎன் கூட்டணி அடையாளம் கண்டுள்ளது.

அந்தப் பட்டியல் விரைவில் அம்னோ தலைவரும் பிஎன் தலைவருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் சமர்பிக்கப்படும் என அம்னோ/பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கூறினார்.

“கட்சித் தலைவரிடம் கொடுப்பதற்கு முன்னர் அந்த அம்னோ, பிஎன் வேட்பாளர்களை நாங்கள் ஆய்வு செய்வோம். அடுத்து மாநிலத் தொடர்புக் குழுக்களுக்குத் தகவல் கொடுக்கப்படும்.”

“எல்லாவற்றுக்கும் மேலாக தேர்வு செய்யப்படும் வேட்பாளர் மக்கள் விரும்புகின்றவராக இருக்க வேண்டும். கட்சி விரும்புகின்றவராக இருக்க வேண்டியதில்லை,” என 66வது பாரிசான் நேசனல்

இளைஞர் வாழ்வாதாரக் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் தெங்கு அட்னான் நிருபர்களிடம் பேசினார்.

மாநில தொடர்புக் குழுக்களிடமிருந்து பெறப்பட்ட பெயர்ப் பட்டியல்கள்- 191 தொகுதிகளும் 222 நாடாளுமன்றத் தொகுதிகளும் சம்பந்தப்பட்டவை என அவர் மேலும் சொன்னார்.

“கட்சி வட்டாரங்களும் நியமிக்கப்பட்ட அமைப்புக்களும் ஆய்வு செய்த பெயர்கள் மீதான அறிக்கைகளை நாங்கள் பரிசீலித்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வோம் என்றும் தெங்கு அட்னான் குறிப்பிட்டார்.

கலைக்கப்படும் என்ற வதந்திகள்

வேட்பாளர்கள் பழையவர்களாகவும் புதுமுகங்களாகவும் இருப்பர் எனத் தெரிவித்த அவர், குறிப்பாக விவேகமானவர்களும் மக்களை வழி நடத்தக் கூடியவர்களும் நாட்டை மேம்படுத்தக் கூடியவர்களும் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்படுவர் என்றார்.

நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் நஜிப், அகோங்கைச் சந்தித்துள்ளதாக கூறும் வதந்திகள் பற்றியும் தெங்கு அட்னானிடம் வினவப்பட்டது.

“அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமென சிலர் சொல்கின்றனர். எல்லாம் ஊகங்களே. எனக்குத் தெரிந்த வரை நஜிப் ஜோகூர் பாருவில் திருமண நிகழ்வு ஒன்றிலும் தமது பிள்ளையின் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார். எது எப்படி இருந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

நஜிப் நாளை இரவு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு அமெரிக்காவுக்குப் புறப்படுகிறார்.

பெர்னாமா