பக்காத்தான் ராக்யாட், 2008ல் பின்பற்றிய அதே வெற்றி வழிமுறையை எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் கடைப்பிடிக்கும். கடந்த தேர்தலில் பக்காத்தான் உறுப்புக் கட்சிகள் பிஎன் -னுடன் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் மோதின.
டிஏபி, பாஸ் ஆகியவற்றுடன் தொக்தி ஒதுக்கீட்டுப் பேச்சுக்களை பிகேஆர் முடித்துக் கொண்டுள்ளதாகவும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறினார்.
பல இடங்களுக்கு மேலும் விவாதங்கள் நிகழ வேண்டிய அவசியம் இருந்தாலும் அவை தீர்க்கப்பட்டு விடும் என அவர் உறுதியாக நம்புகிறார்.
பிகேஆர் மூத்த தலைவர் இட ஒதுக்கீடுகள் பற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பார் என்றும் அஸ்மின் சொன்னார். ஆனால் அந்தப் பட்டியலில் வியப்பளிக்கும் அம்சங்கள் ஏதும் இருக்குமா என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
பக்காத்தான் கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்களை பாதிக்கும் மும்முனைப் போட்டிகள் ஏதும் இருக்குமா எனக் கேட்கப்பட்ட போது அஸ்மின் உறுதியாக ‘இல்லை’ என்றார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் பற்றி மனித உரிமைக் கட்சியுடன் (HRP) பக்காத்தான் ராக்யாட் பேசியுள்ளதா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், “அதிகாரப்பூர்வமற்ற” பேச்சுக்கள் ஏற்கனவே நடத்தப்பட்டு வருவதாகச் சொன்னார்.
இந்து உரிமைகள் நெருக்குதல் அமைப்பான ஹிண்ட்ராப்-பின் அரசியல் பிரிவு அந்தக் கட்சி ஆகும்.
அந்தக் கட்சி தனது நோக்கத்தை பக்காத்தானிடம் தெளிவுபடுத்தியுள்ளது. அது ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 14 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.
“தேசிய நிலையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை. நாங்கள் அவர்களுடன் பேச்சு நடத்த வேண்டியுள்ளது. ஒன்றுக்கு ஒன்று போட்டியை உறுதி செய்யும் வகையில் எப்படி அதனை ஏற்றுக் கொள்ள முடியும் என்பது ஆராயப்படும்.”
பிகேஆர் தேர்தல் பிரச்சாரப் பொருட்களை பினாங்கு மாநில பிகேஆர் குழுவிடம் வழங்குவதற்காக பினாங்கு சென்றுள்ள அஸ்மின் நிருபர்களிடம் அந்த விவரங்களைத் தெரிவித்தார்.