இசா சட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் இசா கைதிகள் விடுதலை கோருகின்றனர்

பேராக் கமுந்திங் தடுப்புக் காவல் முகாமில் வைக்கப்பட்டுள்ள பல உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட தடுப்புக் காவல் கைதிகள் தாங்கள் நிபந்தனை ஏதுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

அந்தத் தகவலை இன்று வெளியிட்ட சுவாராம், அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள கைதிகள் எண்ணிக்கையைத் தெரிவிக்கவில்லை. என்றாலும் கடந்த நான்கு நாட்களாக அவர்கள் உண்ணா விரதம் இருப்பாதாக அது கூறியது.

சம்பந்தப்பட்ட கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு அது பற்றித் தெரிவித்ததாக சுவாராம் நிர்வாக இயக்குநர் நளினி ஏழுமலை கூறினார்.

“அந்தக் கைதிகள் தாங்கள் உடனடியாக எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோருகின்றனர். இல்லை என்றால் அரசாங்கம் தங்களை விடுதலை செய்யும் வரையில் அவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடருவார்கள். இசா சட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ள வேளையில் தாங்கள் ஏன் இன்னும் கமுந்திங்கில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம் என்பது அந்தக் கைதிகளுக்கு புரியவில்லை,” என்றார் அவர்.

அந்தக் கைதிகளின் நிலையை உள்துறை அமைச்சும் மலேசிய மனித உரிமை ஆணையமும் விசாரிப்பதோடு அது குறித்து பொது அறிக்கையும் வெளியிட வேண்டும். உள்துறை அமைச்சு அவர்களை விடுவிக்க வேண்டும் அல்லது திறந்த நீதிமன்றத்தில் அவர்கள் மீது குற்றம் சாட்ட வேண்டும்.”

பொது மக்கள் நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுக்கும் கடிதங்களை பிரதமர் , மனித உரிமைகளுக்கான ஐநா உயர் ஆணையர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் எனவும் நளினி கேட்டுக் கொண்டார்.

மேல் விவரம் தருமாறு அவரிடம் பின்னர் கேட்ட போது 50 கைதிகளில் 10 பேர் உண்ணாவிரதத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அன்றாடம் அதிகமான பேர் சேர்ந்து கொள்வதாகவும் அவர் சொன்னார்.

என்றாலும் உண்ணாவிரதம் பற்றிய தகவல் இன்று தான் இரண்டு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கிடைத்தது என்றும் அது மேலோட்டமாக இருப்பதால் சுவாராம், விசாரிக்குமாறு சுஹாக்காமைக் கேட்டுக் கொண்டது என்றும் நளினி தெரிவித்தார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் அடையாளத்தைத் தெரிவிக்கவும் அவர் மறுத்து விட்டார். அந்த இருவரது குடும்பங்களும் அடையாளம் தெரிவிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாக அவர் காரணம் கூறினார். மற்ற கைதிகளின் அடையாளமும் தெரியவில்லை.

இசா சட்டத்திற்குப் பதிலாக இயற்றப்பட்டுள்ள 2012ம் ஆண்டுக்கான பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) மசோதாவை மே 9ம் தேதி தேவான் நெகாரா நிறைவேற்றியது.

அந்த இசா கைதிகளுக்கு நியாமான விசாரணை வழங்கும் சாத்தியம் உள்ளதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் தமது நிலையை விளக்குவதற்கு அவர் கால அவகாசம் கோரினார்.