இஸ்லாமியக் கட்சியான பாஸ் கட்சியின் பெயரிலிருந்து ‘இஸ்லாம்’ என்பதை அகற்ற வேண்டுமா என்ற பிரச்னை மீது ஆட்சியாளர் மாநாடு ஏற்கனவே முடிவு செய்து விட்டதால் அந்தப் பிரச்னை இப்போது எழ வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அந்தக் கட்சியின் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கூறியிருக்கிறார்.
“அந்த விவகாரம் வெகு காலத்துக்கு முன்பே தீர்க்கப்பட்டு விட்டது. அரசியல் கட்சிக்ள் தங்கள் பெயர்களில் இஸ்லாம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என ஆட்சியாளர் மாநாடு முடிவு செய்துள்ளது,” என தொடர்பு கொள்ளப்பட்ட போது மாஹ்புஸ் சொன்னார்.
பாஸ் கட்சி தனது பெயரில் உள்ள ‘இஸ்லாம்’ என்னும் சொல்லைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாக தாம் தேசிய பாத்வா மன்றத்தில் எழுப்பப் போவதாக பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா சொன்னதாக பெரித்தா ஹரியானில் இன்று வெளி வந்துள்ள செய்தி பற்றி அவர் கருத்துரைத்தார்.
ஹாருஸ்ஸானி அந்த பாத்வா மன்றத்தில் ஒர் உறுப்பினர் ஆவார். அந்த விஷயம் மீது பாத்வா மன்றம் விவாதிக்க வேண்டும் என மலாய் உரிமை போராட்ட அமைப்பான பெர்க்காசா விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவாக ஹாருஸ்ஸானி பேசினார்.
“அந்த விவகாரம் ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்ட போதிலும் அதனை விவாதிப்பது மன்றத்தைப் பொறுத்ததாகும் என்று கூறிய மாஹ்புஸ், கட்சியின் பெயரை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றவர்களையும் சாடினார்.
“அம்னோ அவர்களை கூலிக்கு அமர்த்தியுள்ளது. அம்னோ தோல்வியின் விளிம்பில் நிற்கும் போது பாஸ் குறித்து முஸ்லிம்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றார் அவர்.
இதனிடையே ஹாருஸ்ஸானியைப் பெயர் குறிப்பிடாமல் அந்த மாநில முப்தி அரசியல் விளையாட்டில் ஈடுபடக் கூடாது பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் தமது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
“பாஸ் கட்சி குறித்து அத்தகைய கெட்ட எண்ணத்தை அவர் கொண்டிருந்தால் அவர் கட்சி அரசியலில் இறங்காமல் இருப்பது நல்லது,” என நிக் அஜிஸ் அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஹாருஸ்ஸானிக்கு வரலாறும் தெரியவில்லை எனச் சாடிய நிக் அஜிஸ், பாஸ் உதயமானதற்கான பல காரணங்களில் அம்னோ இஸ்லாத்தை தற்காக்கத் தவறியதும் ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டினார்.