அம்னோ தோற்றம் பெறுவதற்கு முன்னரே நாட்டின் சுதந்திரத்துக்குப் போராடிய பல ஹீரோக்கள் (வீரர்கள்) உள்ளனர். ஆனால் அந்த ஆளும் கட்சி, தான் எழுதிய வரலாறு உண்மையை எடுத்துரைப்பதற்காக திருத்தப்பட்டால் தனது அதிகாரத்தை இழந்து விடுவோமோ என அஞ்சுகிறது என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறுகிறார்.
அவர் நேற்று கோம்பாக்கில் 800 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். சுதந்திரப் போராளிகளின் உண்மையான வரலாறு வெளியிடப்படும் என அஞ்சி, பாஸ் கம்யூனிஸ்ட் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக அம்னோ தொடர்ந்து பறை சாற்றி வருகிறது என்றார் அவர்.
“முகமட் இந்ரா சுதந்திரப் போராளி என்று மட்டுமே நான் கூறினேன். ஆனால் மாட் இந்ரா ஒரு கம்யூனிஸ்ட் என அது கூறுகிறது.”
“அம்னோ காலனித்துவ போக்கை பின்பற்றுகிறது. நாம் அந்த விவகாரத்தை மேலும் தொடர்ந்தால் வரலாற்றை மீண்டும் திருத்தி எழுத வேண்டியிருக்கும் என அது அஞ்சுகிறது,” என்றார் அவர்.
1950ம் ஆண்டு புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலைமை தாங்கிய மாட் இந்ரா, அந்த சம்பவத்தில் உண்மையான ஹீரோ என்றும் பிரிட்டிஷ் சம்பளப்பட்டியலில் இருந்த போலீசார் அல்ல என்றும் மாட் சாபு தமது சொற்பொழிவு ஒன்றில் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர் கடுமையான விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளார்.
அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா முதலில் அந்த விஷயத்தை பெரிதுபடுத்தியது. அதனைத் தொடர்ந்து பல முன்னாள் வீரர்கள் மாட் சாபு உரைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாட் சாபுவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்று கூட சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவசர காலம் அமலில் இருந்த போது 1950ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தை கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் தாக்கியதாக வரலாற்றுப் புத்தகங்களில் குறிக்கப்பட்டுள்ளது.
மெர்தேகா தினத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய் விட்டது
அம்னோ தோற்றம் பெறுவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னர் நாட்டின் சுதந்திரத்துக்குப் போராடிய பலருக்கு அம்னோ தலைவர் துங்கு அப்துல் ரஹ்மான், அம்னோவை தோற்றுவித்த ஒன் ஜபார் ஆகியோருக்கு கொடுக்கப்படும் அதே சமமான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கவர்ச்சிகரமாகப் பேசக் கூடிய மாட் சாபு குறிப்பிட்டார்.
“மெர்தேகா கொண்டாட்டங்கள் அம்னோ பாணியிலான கொண்டாட்டங்களாக எப்போதும் இருந்து வருகின்றன. துங்கு அப்துல் ரஹ்மான் அல்லது டத்தோ ஒன் தவிர இஷாக் ஹாஜி முகமட்(பாக் சாக்கோ) அல்லது புர்ஹானுடின் அல் ஹில்மி போன்றவர்கள் இல்லையா ?”
“மெர்தேகா வந்ததும் அம்னோ தலைவர்கள் மட்டுமே சித்தரிக்கப்படுகின்றனர். டத்தோ மகராஜா லேலா அல்லது மாட் கிலாவ் இமான் ராசு போன்றவர்கள் பற்றிய திரைப்படங்களை ஏன் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எடுக்கக் கூடாது ?
“ஒவ்வொரு ஆண்டும் மெர்தேகாவின் போது ‘புக்கிட் கெப்போங்’, ‘சார்ஜென் ஹசான்’ போன்ற திரைப்படங்களை மட்டுமே அவர்கள் காட்டுகின்றனர். என்னைத் தவறாக எண்ண வேண்டாம். சார்ஜென் ஹசான் சிறந்த போராளி. ஆனால் பி ராம்லி நடைத்த திரைப்படமாக இருந்தாலும் அவர், ஜப்பானிய காலனித்துவ ஆட்சியாளருக்கு எதிராக சண்டையிட்ட பிரிட்டிஷ் வீரர் ஆவார்,” மாட் சாபு புன்முறுவலுடன் கூறினார்.
மலேசியர்களிடையே பல ஆண்டுகளாக சுதந்திர நாள் கொண்டாட்டங்களுக்கே அர்த்தமில்லாமல் போய் விட்டது எனத் தோன்றுகிறது. வீடுகளில் அல்லது வாகனங்களில் தேசியக் கொடியை பறக்க விடுகின்றவர்களைக் காண்பதே அரிதாக இருக்கிறது என அவர் வருத்தத்துடன் கூறினார்.
தாம் “தமது நாட்டை மிகவும் நேசிப்பதாக” குறிப்பிட்ட மாட் சாபு, கம்யூனிசத்திற்கு புத்துயிரூட்டுவதோ அல்லது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாக செயல்படுவதோ தமது எண்ணமில்லை என வலியுறுத்தினார்.
“அந்தக் குற்றச்சாட்டுக்கள் புதியவை அல்ல. எங்கள் தலைவர்கள் இதற்கு முன்னர் பல வகையான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளனர்,” என்றார் அவர்.
மாட் இந்ரா விவகாரம் மீது அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதினுடன் விவாதம் நடத்த தாம் அஞ்சுவதாக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கும் மாட் சாபு பதில் அளித்தார்.
தம்மை வெளிப்படையாக தாக்கிப் பேசிய அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசினுக்கும் தமக்கும் இடையில் தான் தகராறு என அவர் சொன்னார்.
“கைரி நல்ல பையன். எதிர்காலத்தில் பாஸ் தலைவராக திகழ்வதற்கு உரிய ஆற்றல் அவரிடம் உள்ளது… நான் தீவிரமாக உள்ளேன். அம்னோ துணைத் தலைவர் தான், நான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்னைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறார். ஆகவே நான் ஏன் கைரியுடன் வாதம் புரிய வேண்டும் ?”
சொற்பொழிவு ஒன்றின் போது தாம் ஆற்றிய உரையைத் திரித்து வெளியிட்டதற்காக மாட் சாபு நாளை உத்துசான் மலேசியா மீது வழக்குத் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் செய்தி மீது முதல் பக்கத்தில் மன்னிப்பு கேட்பதற்கு உத்துசானுக்கு மாட் சாபு அளித்த காலக்கெடு முடிந்து இரண்டு நாட்களாகி விட்டது.
நோ.61
1957 – ல் துங்கு அப்துல் ரஹ்மான் : MERDEKA ! MERDEKA ! MERDEKA !
2017 – ல் நஜிப் துன் ரசாக் : MAUDUITKA ! MAUDUITKA ! MAUDUITKA !
மலாய்க்காரன் அல்லாதவர்கள் செய்த தியாகங்கள் பொறுப்போடு உண்மையாக உழைத்ததை இந்த நாதாரிகள் குறிப்பிடுகின்றான் களா? எல்லாவற்றையும் பொய் பிரச்சாரத்தின் வழி அழித்து நம்மை ஒன்றுமில்லா வந்தேறிகள் என்று சரித்திரத்தில் எழுதி நிரந்தரமாக்கிடவே எல்லாம். அதற்கு துணை போகின்ற துரோகிகள்- MIC MCA நாதாரிகள்.