பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை மனித உரிமை கண்காணிப்பு அமைப்பான Proham கண்டித்துள்ளது.
அந்த சம்பவங்கள் “முறையற்றவை, பொருத்தமற்றவை, தீய நோக்கம் கொண்டவை” என அது வருணித்தது.
கூட்டரசு அரசமைப்பில் கூறியுள்ளவாறு அமைதியாகக் கூடுவதற்கு குடிமக்களுக்கு உரிமை இருந்தாலும் அவ்விரு ‘அச்சுறுத்தல் நடவடிக்கைகளும்’ அம்பிகாவின் தனிமையையும் சமய நிலையையும் மீறியதாகும் என்று அந்த அரசு சாரா அமைப்பு விடுத்த அறிக்கை கூறியது.
“ஒர் இந்துவும் சைவ உணவுப் பழக்கமும் உள்ளவருமான ஒருவருடைய வீட்டுக்கு முன்பு மாட்டிறைச்சி பேர்கர்களை விற்பது ஒருவருடைய உணர்வுகளை மதிக்காததற்கு இணையாகும். அந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது,” என அது மேலும் தெரிவித்தது. அந்த அமைப்பு அந்த நிகழ்வை 2009ம் ஆண்டு இந்துக் கோயில் இடம் மாற்றம் செய்யப்படுவது மீது முஸ்லிம்கள் குழு ஒன்று நடத்திய ‘மாட்டுத் தலை’ ஆட்சேபத்துடன் ஒப்பு நோக்கியது.
மே 10ம் தேதி அங்காடி வியாபாரிகள் அமைப்பான இக்லாஸ் பெர்சே தலைவர் வீட்டுக்கு முன்னால் பேர்கர் கடை போட்டது பற்றியும் மே 15ம் தேதி அதே இடத்தில் முன்னள் இராணுவ அதிகாரிகள் நடத்திய உடற்பயிற்சி ( ‘butt exercises’) பற்றியும் Proham கருத்துரைத்தது.
அந்த நிகழ்வுகள் தொடர்பில் அதிகாரிகள் குறிப்பாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் விடுத்துள்ள மருட்டல்கள் மீது “கண்களை மூடிக் கொண்டுள்ளது” மேலும் ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடும் என்றும் Proham கவலை அடைந்துள்ளது.
அம்பிகா நாட்டுக்கு மீண்டும் பிரச்னைகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் நாட்டின் பெயரைக் களங்கப்படுத்தினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் மலேசிய ஆயுதப்படைகளின் முன்னாள் வீரர்கள் சங்கத் தலைவர் முகமட் அலி பாஹாரோம் எச்சரித்துள்ளார்.
பண்பாட்டு உணர்வுகள் மீறப்படுவது, தனிப்பட்ட முறையில் அச்சுறுத்துவது போன்ற அத்துமீறல்களைத் தவிர்க்கும் பொருட்டு தனிப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டாம் என்றும் Proham ஆர்ப்பாட்டக்காரர்களைக் கேட்டுக் கொண்டது.
“தேர்வு செய்யப்பட்டு சட்டங்களும் நீதிகளும் அமலாக்கப்படுகின்றன என்ற எண்ணம் மக்களிடையே உருவாகாமல் இருப்பதை போலீசாரும் ஊராட்சி மன்ற அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.”
மனித உரிமை மேம்பாட்டுக்கான சங்கமான Proham மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைப்பாகும். அதில் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையத்தின் பல முன்னாள் உறுப்பினர்கள் அங்கம் பெற்றுள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட அதன் பத்திரிக்கைக் குறிப்பில் Proham தலைவர் சைமன் சிபாவுன், உறுப்பினர்களான ஹம்டான் அட்னான், டெனிசன் ஜெயசூரியா, ரேமன் நவரத்னம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.