குவான் எங்: துங்கு அசீஸ் பற்றிக் கருத்துரைப்பது அவசியமற்றது

அண்மையில் டிஏபி-இலிருந்து விலகிய துங்கு அப்துல் அசீஸ் இப்ராகிம் பற்றிக் கருதுரைக்க வேண்டிய அவசியமில்லை,சொல்லாமலேயே மக்கள் புரிந்துகொள்வார்கள் என்கிறார் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்.

இன்று காலை பினாங்கில் மலேசிய இணையச் செய்தியாளர்களின் மூன்றாமாண்டுக் கூட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றிய லிம், உரை நடுவில் உத்துசான் மலேசியாவின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை ஆதரிக்கும் துங்கு அப்துல் அசீஸின் அறிக்கையைக் காண்பித்தார்.

“இதைப் பற்றி என் கருத்து என்னவென்று நீங்கள் கேட்க விரும்பினால், ‘கருத்துரைக்க ஒன்றுமில்லை’ என்பதே என் கருத்தாகும்.

“எனவே, பிறகு இதைக் கேட்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். படித்தால் உங்களுக்கே தெரிந்துவிடும்”, என்று கேலியாகக் குறிப்பிட்டார்.

அம்னோ-தொடர்புடைய உத்துசானின் அந்தத் தலைப்புச் செய்தி ‘துங்கு அசீஸின் அறைகூவல்’ என்று அலறியது.

அதில் துங்கு அசீஸ், நஜிப்பின் தலைமைத்துவத்துக்கு “ஆதரவு கொடுப்பது அவசியம், அவர் கொண்டுவந்துள்ள உருமாற்றுத் திட்டங்கள் வெற்றிபெற  வாய்ப்பும் அவகாசமும் அளிக்கப்பட வேண்டும்”, என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

டிஏபி-இல் உதவித் தலைவராக இருந்து திங்கள்கிழமை அதிலிருந்து விலகிய துங்கு அசீஸ், நேற்று பெர்னாவுக்கு வழங்கிய நேர்காணலில் நஜிப்பை ஆதரிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டிருந்தார்.

பேங்க் நெகாரா முன்னாள் ஆலோசகரும், டிஏபியின் முதலாவது மலாய் செனட்டருமான துங்கு அசீஸ் மாற்றுக்கட்சிக் கொள்கையுடன் ஒத்துப்போக முடியாததால் அக்கட்சியிலிருந்து விலகிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

TAGS: