பக்காத்ததன் ராக்யாட், புத்ராஜெயாவைச் சட்டப்பூர்வமான வழிகளில் கைப்பற்ற முடியும் என்பதில் நம்பிக்கை இல்லாததால் பெர்சே 3.0 ஆர்ப்பாட்டத்தின் போது ரத்தம் சிந்தப்படுவதற்கு முயற்சி செய்ததாக முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் முகமட் நூர் கூறுகிறார்.
தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு பெர்சே 3.0 ஆர்ப்பாட்டத்தை விசாரிப்பததற்காக அமைக்கப்படும் சுயேச்சைக் குழு தமது கருத்தை ஆராய வேண்டும் என்று மலாய் நாளேடான பெரித்தா ஹரியானுக்கு வழங்கிய பேட்டியில் அப்துல் ரஹிம் குறிப்பிட்டுள்ளார்.
“தேச நிந்தனைத் தன்மையுடைய கருத்துக்கள் எனக்குக் கிடைத்தன. புத்ராஜெயாவை கைப்பற்ற முடியும் என எதிர்க்கட்சிகள் நம்பாததால் ரத்தம் சிந்தப்படுவதை அவை தேர்வு செய்ததாக கூறப்பட்டது,” என அவர் சொன்னதாக அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
பெர்சே கூட்டணிக்குள் அங்கீகாரம் அளிக்கும் தரப்புக்களையும் அந்தக் குழு ஆராய வேண்டும் எனக் குறிப்பிட்ட அப்துல் ரஹிம் அவ்வாறு செய்தால் மட்டுமே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றார்.
“அந்தக் குழு கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள அரசு சாரா அமைப்புக்களின் பட்டியலையும் விசாரிக்க வேண்டும். அவை இப்போது பெர்சேயின் பணிகளுக்கு பொறுப்பேற்றிருப்பதால் நிலைமை மோசமாகக் கூடிய சாத்தியமும் விசாரிக்கப்பட வேண்டும்,” என்றும் அப்துல் ரஹிம் சொன்னார்.
மார்க்ஸிஸ்ட் உபாயங்கள்
பெர்சே-க்கு பின்னணியில் இருப்பவர்கள் மார்க்ஸிஸ்ட்கள் அல்ல என்பதை ஒப்புக் கொண்ட அப்துல் ரஹிம் ஆனால் அந்த தேர்தல் சீர்திருத்த இயக்கம் பின்பற்றிய வழிகள் அவற்றைப் போன்று இருப்பதாகச் சொன்னார்.
பெர்சே தேர்தல் சீர்திருத்தத்தை வலியுறுத்துவதற்கான அரங்கமாக இருந்தாலும் ஒரு பெரிய இயக்கம் ஒன்றின் கீழ் மக்களை ஒன்று திரட்டுவதற்கு அவர்களிடம் காணப்படும் அதிருப்தியைப் பயன்படுத்தும் அமைப்பாக அது திகழ்கிறது.
“அது பெரிய இயக்கமாக மாறும் போது அரசாங்கத்தைக் கவிழ்ப்பது அதன் நோக்கமாகி விடுகிறது. அது கொள்கைகளுக்கும் அமைப்புக்களுக்கும் எதிராக மக்களைத் தூண்டி விடுகிறது.”
“அது இனிமேலும் ஒரு ‘மலர்’ அல்ல. திரை மறைவில் சில நபர்கள் சம்பந்தப்பட்ட விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28ம் தேதி நடந்த இயக்கம் மார்க்ஸிஸ்ட் இயக்கத்தை போன்றது,” அப்துல் ரஹிம் பெரித்தா ஹரியானிடம் கூறினார்.