சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் டூச் வங்கி ( Deutsche Bank )க்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை புலனாய்வு செய்யுமாறு ஜெர்மானிய நிதி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியது தொடர்பில் ஏதும் நிகழ்ந்துள்ளதாக என்பதைக் கண்டறிவது அந்த புலனாய்வின் நோக்கமாக இருக்கும்.
ஸ்விசர்லாந்தில் இயங்கும் புருனோ மான்செர் நிதி நிறுவனம் அந்தத் தகவலை அறிவித்துள்ளது.
தான் சமர்பித்த புகாரின் அடிப்படையில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
“ஜெர்மன் கூட்டரசுப் பிரதமருக்கு நீங்கள் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்ட கோணத்தில் விசாரிக்குமாறு ஜெர்மானிய நிதி அமைச்சு, ஜெர்மானிய கூட்டரசின் நிதி கண்காணிப்பு வாரியத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறது”, என அந்த அமைச்சு புருனோ மான்செர் நிதி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள மின் அஞ்சலில் கூறியுள்ளது.
“அந்த வாரியம் நிலைமையை தெளிவுபடுத்தத் தொடங்கி விட்டதாகவும் ஜெர்மானிய நிதி அமைச்சு கூறியது.”
கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்படுவதை தடுக்கும் சட்டத்தை அமலாக்கும் அதிகாரமும் நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் அதிகாரமும் அந்த வாரியத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
டூச் வங்கி புலனாய்வு செய்யப்படுவதை வரவேற்ற புருனோ மான்செர் நிதி நிறுவனம், ஜெர்மனியில் உள்ள தாயிப்பின் சொத்துக்களை ஜெர்மானிய அரசாங்கம் முடக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.
“தாயிப் குடும்பத்துடன் அந்த வங்கிக்கு உள்ள வர்த்தகத் தொடர்புகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்,” என்றும் புருனோ மான்செர் நிதி நிறுவனம் வலியுறுத்தியது.
உலகம் முழுவதும் அவப்பெயரை பெற்றுள்ள தாயிப்புடன் வர்த்தக உறவுகளை டூச் வங்கி துண்டித்துக் கொள்ளவும் வேண்டும்.”
புருனோ மான்செர் நிதி நிறுவனம், மழைக்காடுகள் மீட்பு சங்கம், மருட்டப்பட்ட மக்களுக்கான கழகம் ஆகியவை கடந்த ஜுன் மாதம் ஜெர்மன் பிரதமர் அஞ்செலா மெர்க்கெலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன. டூச் வங்கி, தாயிப்புடன் வைத்துள்ள உறவுகள் பற்றியும் ஜெர்மனியில் உள்ள தாயிப் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும் என்றும் அவை அதில் கோரியிருந்தன.
2004ம் ஆண்டு தொடக்கம் டூச் வங்கி, சரவாக் அரசாங்கத்துக்காக பல நூறு மில்லியன் யூரோ பெறும் வர்த்தகப் பரிவர்த்தனைகளை நடத்தியிருப்பதாகவும் மலேசியாவில் தாயிப் குடும்பத்துக்குச் சொந்தமான சாஹ்யா மாத்தா நிறுவனத்துடன் கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் புருனோ மான்செர் தெரிவித்துள்ளது.
மே மாதம் ஸ்விட்சர்லாந்தில் உள்ள தாயிப் சொத்துக்கள் மீது புலனாய்வை ஸ்விஸ் நிதிச் சந்தைக் கண்காணிப்பு வாரியம் தொடங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஊழல் புரிந்துள்ளதாகக் கூறப்படுவதின் தொடர்பில் ஜுன் மாதம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் விசாரனையைத் தொடங்கியுள்ளது.